13 பிப்ரவரி 2013

அன்புள்ள அய்யனார்–சு.ரா. வின் 200 கடிதங்கள் புத்தகம்

2013-02-13 08.35.11பெரியவர் சுந்தரராமசாமி அவர்களின் 200 கடிதங்களை உள்ளடக்கிய புத்தகம் “அன்புள்ள அய்யனார்” . அவர் அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. மனதில் கல்மிஷமில்லாமல் அன்போடும், ஆழ்ந்த நட்புணர்வோடும் ஒரு பெரிய படைப்பாளி, விடாமல், தொடர்ந்து ஒரு வாசகருக்கு, எழுத்தாளருக்கு, பேட்டியாளருக்கு, முனைப்பாக எழுதிய கடிதங்கள். அய்யானாரை விடாமல் ஊக்கப்படுத்தியும், அவரது தனிப்பட்ட, இலக்கியம் சார்ந்த செயல்களைப் பாராட்டியும், வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதமாய், போலியான வார்த்தைகளோ, புகழுரையோ, புத்திமதிகளோ இல்லாமல், ஆத்மார்த்தமாய், அழுத்தமாய், ஒருவரின் முன்னேற்றத்தில் உளமார்ந்த அக்கறை கொண்டு, ஒருவர் தொடர்ந்து செயல்பட முடியுமானால் அதற்கு சு.ரா. அவர்கள் அய்யனாருக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் இங்கே சான்றாக நிற்கிறது. இப்படி ஒருவருடன் நமக்குத் தொடர்பு இல்லாமல் போயிற்றே என்கிற ஏக்கம் ஒரு நல்ல வாசகனுக்குக் கண்டிப்பாக ஏற்படும். அவரது குடும்ப விஷயங்கள், இவரது குடும்ப நடப்புகள், நலன்கள், இவரது அடுத்தடுத்த முயற்சிகள், இலக்கிய நிகழ்வுகள், எல்லாவற்றையும் ஒவ்வொரு கடிதத்திலும் அக்கறையோடு விசாரித்து, அளவாக, அழகாக அவருக்கு அதுபற்றியதான தேவையை எடுத்துச் சொல்லி, எங்ஙனமேனும் அய்யானார் வாழ்க்கையின் உச்சத்திற்குப் போய்விட்டதைத் தான் கண்ணாரக் கண்டாக வேண்டும் என்கிற நம்பிக்கையோடும், பாசத்தோடும் சுரா அவர்கள் எழுதியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் நாமும் நம் வாழ்க்கையில் கருத்தாக எடுத்துக் கொள்ளத் தூண்டும் கருத்துரைகள். பரந்த உள்ளமும், நல்ல எண்ணங்களும், செயல்களும், நல்லொழுக்கமும், நேர்மையும், இருந்தால் மட்டுமே இப்படியான ஒரு நம்பிக்கை மிகுந்த அக்கறையை மற்றவர்பால் செலுத்த முடியும். அவரின் இழப்பு பல சிறிய, பெரிய இலக்கியவாதிகளுக்குப் பெரும் நஷ்டம்தான். ஆனால் அதை வாய்விட்டுச் சொல்லத் தயங்கும் நிலை காண முடிகிறது. ஏன் என்றுதான் புரியவில்லை. விகல்பமின்றி உணருபவர்கள் நல்லதை நன்னோக்கில் புரிந்து கொள்வார்கள். நல்ல சிந்தனையையும், நல்ல எண்ணங்களையும், நல்ல செயல்களையும், ஆத்மார்த்தமாய் விரும்புபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது . மீனாள் பப்ளிஷிங் உறவுஸ் இதை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...