12 நவம்பர் 2011

மேய்ச்சல் சிறுகதை


அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான் எங்கு நோக்குகிறேன் (நோங்குகிறேன்) எனப் பார்க்கிறார்களா என்று தோன்றியது. அவர்களெல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள்.. யாரும் விதி விலக்கல்லதான். என் உட்பட. இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லைதான். நானும் மனிதன்தானே! ஆனால் வெறும் பார்வைதான் என் பார்வை. மற்றதற்கெல்லாம் பயம். அந்த அலுவலகத்தில் எல்லாருக்கும் அது ஒரு வேலை. அந்த தரிசனம் பெறவில்லையெனில் அந்த நாள் சாபல்யம் ஆகாது. தினசரி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதைப் போல. அந்த முகத்தைப் பார்த்தால்தான் மனசு ஆறும்.

எல்லாருக்கும் நந்தினி மேல் ஒரு கண். தனக்குக் கிடைக்க மாட்டாளா என்கிற ஏக்கம். அடிக்கடி அவளை ஒரு முறை பார்த்துக் கொள்வதில் ஒரு திருப்தி. அந்த அழகு அப்படித்தான் ஈர்த்தது. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் ரசித்தார்கள். நாற்காலிக்குக் கீழே தெரியும் அவள் கால்களை ஏக்கத்தோடு பார்த்தார்கள் கொலுசு மாட்டியிருப்பதால் அந்தக் கால்களுக்கு அழகா அல்லது அந்தக் கால்களினால் அந்தக் கொலுசுக்கு அழகு வந்ததா? பதிலைக் கண்டு பிடிப்பது கஷ்டம்தான். ஆனால் அந்தக் கால்களினால்தான் அந்தக் கொலுசுக்கு அழகு. பட்டிமன்றம் அவர்களின் மனதுக்குள். தான் பார்க்கிறோம் என்பதை ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல்தான் செய்தார்கள். என்றாவது தனக்குப் படிந்தால் போட்டியிருக்கக் கூடாதே என்கிற தாபம். அதனால் அவர்கள் ஒன்று சேரும்போது அவளைப் பற்றிப் பேசிக் கொள்வதில்லை.

கண்ணு, காது, மூக்கு, கன்னம், வாயின்னு பிடிச்சுப் பிடிச்சு வச்சிருக்கேய்யா அவளுக்கு….எல்லாமும் இத்தனை எடுப்பா இருந்து நா இதுவரை எவளையும் பார்க்கலைய்யா…

அய்யோ…போறாளே…போறாளே….என்று அவள் பின்புறம் பார்த்து ஏங்கினார்கள். ஆபீசே மயக்கத்தில் கிடந்தது.

கேஷ் பிரிவுக் குமரேசன் எப்பொழுதுமே பத்து நிமிஷம் லேட்டாகத்தான் வருவான். பணப்பொறுப்பாளி என்பதனாலேயே அது அவனாக எடுத்துக் கொண்ட சலுகை. தினமும் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குக் கிளம்புவான். நீங்கள்லாம் அப்டியா? ஏதாச்சும் கேட்டால் முதல் கேள்வி அப்டித்தான் விழும். அநேகமாக, அநேகமாக என்ன பெரும்பாலுமே ஆபீசைப் பூட்டி சீல் வைப்பது அவனாகத்தான் இருக்கும். காவலாளி வைத்திருக்கும் பதிவேட்டில் பூட்டிய நேரம், கையெழுத்து எல்லாமும் அவனுடையதுதான்.

அதென்னய்யா தெனம் ஒரே கவரைப் போடுற…அதெல்லாம் ஆகாது…கவரை மாத்து…என்று பூட்டிய சாவியைப் போட தினமும் ஒரு புதுக் கவர் மாற்றி விடுவான். சாவியை உள்ளே போட்டு சாவி அளவுக்கு அடுக்கடுக்காக மடித்து, கவரின் நுனியில் ஒட்டப்பட்டிருக்கும் வெள்ளைப் பேப்பரையும் மடித்து அதன் நுனியை நன்றாக இழுத்து ஒட்டி மேலும் கீழும் கோடு போட்டு, குறுக்கே தன் கையெழுத்தை அழுத்தமாக இட்டு நேரமும் பதிவு செய்திருப்பான். எவனும் இடைப்பட்ட நேரத்தில் அதைக் கிழித்து சாவியை எடுக்க முடியாது. ஆபீசைத் திறக்க முடியாது.

மறுநாளைக்கு வங்கியில் சேர்ப்பிக்க இருக்கும் வசூல் பணத்தை அங்கு கேஷ் செஸ்டில்தான் வைத்துவிட்டுப் போவான் என்றாலும் அதற்கும் சில அடையாளங்களை உண்டாக்கி விட்டுத்தான் போவான் குமரேசன். அவனது அக்கறை மதிக்கப்பட்டது ஆபீசில். பண விவகாரம் நமக்கெதுக்கய்யா என்று ஒதுங்கினார்கள். அந்த பயம் இருக்கட்டும்….

காலையில் வந்து கேஷ்செஸ்டைத் திறக்கும் முன் உத்து உத்து அவன் பார்ப்பதை ரசிப்பார் மேலாளர் மயிலேறி. தான் கேஷியராகத் தேர்வு செய்த நபர் மீது அவருக்கு அத்தனை பெருமை. எல்லாம் சரியாயிருக்
குல்ல என்று வேறு கேட்டுக் கொள்வார்.

சரியா இல்லாம என்ன சார் ஆகப் போவுது… - கடுப்பாகக் கேட்டார் மதிவாணன் ஒரு நாள். யாரைச் சந்தேகப்படுகிறார் என்ற கோபம்!

நாமெல்லாம் சாயங்காலம் கிளம்பிடுறோம்…இப்பக் காலைலதான வர்றோம்… இடைப்பட்ட பொறுப்பு அவரோடதுதான…அதுனாலதான் கேட்டு வைக்கிறேன்….

அவரும் அப்டிதான சார்…அப்போ ராத்திரி பணம் திருடு போச்சின்னா அவரா பொறுப்பு…?

மறந்துபோய் பூட்டாமக் கூடப் போயிருக்கலாம்ல….?

மேலாளரின் கேள்வியில் அதிர்ந்து போனான் குமரேசன் அன்று. பிறகுதான் அவன் அந்த வழியைக் கடைப்பிடித்தான்.

மேலாளரும் வேறு சில பணியாளர்களும் இருக்கும்போதே கேஷ்செஸ்ட்டைப் பூட்டி விடுவான். இரண்டு முறை அவனே இழுத்துப் பார்த்துவிட்டு மேலாளரையும் ஒரு முறை இழுக்கச் சொன்னான்.

இதென்னய்யா வம்பாப் போச்சு…எங்களையும் சேர்த்துப் பொறுப்பாக்குறியாக்கும்….என்று சொல்லிக் கொண்டே வந்து ஒரு இழு இழுத்தார்.

இப்போ இப்டியே போனா என் ரேகை அதில பதிஞ்சிருக்கும்ல…கடைசியா இழுத்தது நாந்தான? என்றார். அத்தோடு இப்டியே நீ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்னா…? என்று வேறு கேட்டார். நொந்து போனான் குமரேசன். தினம் ஒருவர் இழுக்க வேண்டும் என்றார். மாட்டேன் என்றுவிட்டார்கள் பலரும்.

கேஷியர்தான் சார் பொறுப்பு…எங்களுக்கென்ன வந்திச்சு…? என்று விலகிக் கொண்டார்கள். காரியம் என்று வந்தால் எல்லோரும் கவனமாக விலகிக் கொள்ளும்போது என்னை எவன் கேள்வி கேட்பது? இதுதான் குமரேசனின் தரப்பு.

அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் மேலாளர் எச்சரிப்பது குமரேசனைத்தான். பல வெளி வேலைகளில் திரிவார் மேலாளர் மயிலேறி. அது பெரும்பாலும் அலுவலரின் சொந்தப் பணிகளாக இருக்கும். அந்த வேலைக்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும் என்று வையுங்களேன்.

இதையெல்லாம் இவர் செய்துக்கிட்டிருக்கார் பாரு….கஷ்டம்டா சாமி…

கேலி செய்தார்கள் மறைவாய். அவரைக் கேட்டால்தானே தெரியும் எதற்கு என்று? சும்மா முழம் போடுவாரா…? என்றனர் சிலர்.

மற்ற நேரங்களில் அந்த ஃபைல் என்னாச்சு? இந்த ஃபைல் என்னாச்சு? என்று யாரையேனும் விரட்டிக் கொண்டிருப்பார்.

அந்த ஃபைல் என்னம்மா ஆச்சு? அத என் டேபிள்ல வைக்கிறீங்களா? – இது மட்டும் நந்தினியை நோக்கி அவர் பேசும் பேச்சு.

நாமெல்லாம் நடவடிக்கை எடுத்து வைக்கணுமாம்…அவ ஃபைல மட்டும் அவரு பார்ப்பாராம்…ஏன்? நம்மது சிலதுக்காக அவர் மெனக்கெட்டா என்ன? குறைஞ்சு போயிடுவாராமா? ஆளாளுக்கு வழியிறாங்கன்னா, இவருமா? குசு குசுவென்று நிறையப் பேசிக்கொண்டார்கள்.

தெனமும் எட்டு மணிக்கு மேலதான் நான் கிளம்பறேன்…கடைசியாப் போறது நாந்தான். சீல் வைக்கிறதும் நாந்தான். போதுமா? என்றான் குமரேசன் எரிச்சலுடன். மனிதர்கள் எத்தனை சுயநலம் மிக்கவர்கள்? என்று தோன்றியிருக்கலாம்.

சரி, அதை விடுங்கள். சொல்ல வந்தது வேறு. கதை எங்கெங்கோ நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தேவையானதுதான். இந்த உலகத்தில் எல்லாமும் காரண காரியத்தோடுதான் நடைபெறுகின்றன. ஒருவரின் எல்லாச் செயல்களுக்கும் பின்னால் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. பொறுத்திருந்துதான் பார்ப்போமே…!

பத்து நிமிடம் லேட்டாக வருவான் குமரேசன் என்றேனல்லவா! வந்தவன் பரபரவென்று தேடுவான். என்றாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை. தினமுமா? சட்டென்று பாக்கெட்டில் தேடுவது போல் பாவலா செய்து விட்டு மேலாளர் பேனா டேபிளில் இருப்பதை மரியாதை நிமித்தம் எடுக்கத் தயங்கியவனாய், சடாரென்று பின்னால் திரும்பி அவளின் பேனாவை எடுப்பான். எடுத்ததுதான் எடுத்தான். அந்த மூடியை அப்படியா வாயில் வைத்துத் திருகிக் கழற்ற வேண்டும். இடது கை டேபிளில் ஊன்றியமேனிக்குதானே இருக்கிறது? அதென்னவோ அவள் பேனாவை அப்படி வாயில் வைத்துக் கழற்றுவதில் ஒரு மானசீக திருப்தி போலிருக்கிறது. ஒரு நாள் கூட எதுவும் சொன்னதில்லை அவள். அதுதான் இங்கே அதிசயம். அவன் பேனா எடுத்ததைப் பார்த்ததுபோலவே அவள் காட்டிக் கொள்வதில்லையே! தொலையட்டும்! என்று இருக்கிறாளோ? எல்லோரும் கவனிப்பதுதான். ஆனாலும் கேஷியர் குமரேசனுக்குத் தனிச் சலுகைதான்.

தாடிக்குள் புதைந்திருந்த சுப்பிரமணியின் முகத்தில் கூட அது தெரியத்தான் செய்தது. எது? வேறென்ன, ஏக்கம்தான். என்ன பாதுகாப்பிற்கு அவன் இந்த வேஷம் போடுகிறான் என்று தெரியவில்லை. தாடி ஒன்றும் அவன் அடையாளத்தை மறைத்துவிட்ட மாதிரியாகவும் இல்லை. ஒரு வேளை தினமும் பார்ப்பதால் எனக்கு அப்படி இருக்குமோ என்னவோ? கல்யாணம் பண்ணிக் கொள்ளாத அவனுக்கு நிச்சயம் அவள் மேல் ஒரு கண் இருந்தாகத்தான் வேண்டும். நாற்பதைத் தாண்டியவன் அவன். அவன்தான் அவர் அல்ல. ஏனென்றால் அத்தனை காலப் பழக்கம் எங்கள் இருவருக்கும். அந்த அலுவலகத்திலேயே அவனைப் பற்றி அதிகம் அறிந்தவன் நான்தான்.

முதன் முதலில் திருச்சியில் நான் அப்பாய்ன்மென்ட் ஆகிச் சென்று ஜாய்ன் பண்ணியது முதல் எனக்கு அவனைத் தெரியும். ஒரு சிகரெட் தீர்ந்து கொண்டிருக்கும்போதே அந்த நெருப்பிலேயே இன்னொன்றைப் பற்ற வைப்பான். சதா இழுத்துக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை. ஆபீசுக்கு வேலைக்கு வருகிறானா அல்லது சிகரெட் குடிக்க வருகிறானா என்று தோன்றும். கருத்த பெரிய உதடுகள் அவனுக்கு. நான் அவனைப் பார்த்த கோலம் அதுதான். அதுவே அவனின் அடையாளமாயப் போயிற்று.

ஆபீஸ் காம்பவுன்ட்டுக்குள்ளேயே ஊதுவான். அலுவலர் வந்தால் கையைப் பின்னால் மறைத்துக் கொள்வான். அவருக்கும் தெரியும்தான். சமயத்தில் அவன் நிற்கும் இடத்திற்கு அவரே போவது உண்டு. எதற்கு? நெருப்புக்குத்தான். தீப்பெட்டி இல்லாத சமயம் அவன்தான் ஆபத்பாந்தவன். அலுவலர்தான் இருக்கையிலேயே உட்கார்ந்து புகைக்கலாமே? கூடாது என்பதுதான் விதி. யார் கேட்கிறார்கள்? அதுதான் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். இரண்டு பேரும் சேர்ந்து நின்று கொண்டு புகைத்துக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர் மேல் இவனுக்கு எங்கிருந்து மரியாதை வரும்? அது நடத்தையின் அடையாளங்களில்தானே இருக்கிறது? காலம் அன்றைக்கே மாறிவிட்டது.

இவன் சிகரெட் குடிப்பதற்கு இத்தனை விமர்சனமா? என்று கேட்கலாம். சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது. வெளியில் சென்று குடித்துவிட்டு வருகிறேன் என்று ரொம்பவும் ஒழுங்குபோல் ஆள் நகர்ந்து விடுவான். எதற்கு? கூர்ந்து பார்த்தால்தானே தெரியும். அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் உள்ள கருவேலங்காட்டு மறைப்பிற்கு அப்பால் ஒரு பஸ் ஸ்டாப் உண்டு. அங்கு போய் நின்று கொள்வான். பக்கத்தில் ஒரு த்ரீ ஸ்டார் உணவகம். பலவிதமான கார்கள் உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும். அங்கு நின்று போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவன் வழக்கம். நிறைய நடிகைகளையெல்லாம் பார்த்திருக்கேன் என்று அடிக்கடி பெருமையாய்க் கூறிக் கொண்டிருப்பான். வேறு நிறையப் பழக்கங்களும் அவனுக்கு உண்டு என்பதாகத்தான் தெரிந்தது.. படு குஷால் பேர்வழி.

இந்த உதட்டுல முத்தம் கொடுத்தேன்னா அழண்டு போயிடுவாளேடா அவ…என்பேன்.

பிறவியிலேயே அவன் உதடு பெரிது. போதாக்குறைக்கு சிகரெட் ஊதி ஊதி அது கறுத்துக் கிடக்கிறது.

அழண்டுன்னா…?

கசங்கி, துவண்டுன்னு அர்த்தம்…..

கசக்கணும்னுதான ஆச….என்றான்.

இது நடந்தது 1990 ல். அப்போ அவன் வயசு இருபத்திரெண்டோ, மூணோ…. பிஞ்சிலேயே பழுத்து விட்டான்.

டிபார்ட்மென்டுக்கு இப்போதான் வந்திருக்கே…நல்லா வேல கத்துக்கணும்…ப்ரமோஷனுக்கான டெஸ்ட்களப் பாஸ் பண்ணனும்ங்கிற எண்ணமெல்லாம் கிடையாது போலிருக்கு என்றேன் நான்.

….கொஞ்ச நாளைக்கு ஜாலியா இருப்போம்… என்றான்.

அவன்தான் எனக்கு ரூம் பார்த்துக் கொடுத்தான். அந்த லாட்ஜில் அவன் அறைக்கு அடுத்த அறை என்னுடையது. நல்லவேளை. சிகரெட் நாத்தம் மிச்சம். சிகரெட் சாம்பலை ஒரு பான்ட்ஸ் பவுடர் வேஸ்ட் டப்பாவின் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு அதில் தட்டுவான். அப்படியும் அங்கேயும் இங்கேயுமாக சாம்பல் சிதறிக் கிடக்கும் அவன் அறையில்.ஒரே வாடை பிடுங்கும். சுற்றிவர தூசிகளும், முடிக் கற்றைகளுமாகக் கிடக்கும். நிரம்பிய டப்பாவை வெளியில் கொண்டு கொட்ட மாட்டான். அப்படியே இருக்கும். என்றைக்காவது அந்த லாட்ஜின் வேலையாள் மொத்தமாகப் பெருக்க வரும்போது அதை எடுத்துப் போடச் சொல்லுவான். அந்தப் பொம்பளையிடம் கூட ஏதோ சில்மிஷம் பண்ணினான் என்று தெரியும். எல்லா அறைகளுக்கும் மூன்று பேர்கள் உண்டு. அவன் அறையில் அவன் மட்டும்தான். ஓரிருவர் சேர்ந்து கொண்டு பிற்பாடு மாறிக் கொண்டார்கள். ஏனென்று தெரியவில்லை.

ஏண்டா இப்டி? என்று கேட்டதற்கு ஏங்கிட்டக் கேட்டா? மாறினவன்ட்டக் கேளு…என்றான் சுப்பிரமணி.

அவர்களிடம் கேட்டபோது பதில் தாறுமாறாய் வந்தது. கை போடுறான்யா அவன்….என்றார்கள்.

எவனெவனுக்கு என்னென்ன பழக்கம் இருக்கும் என்று எவனாலும் சொல்ல முடியாது. அது அவனவனுக்குத் தெரிந்த ரகஸ்யங்கள். எல்லா மனுஷனும் ரெண்டு மனுஷர்கள் இந்த உலகத்தில்.

மாறிய நபர்கள் சிலர் அந்த லாட்ஜ்ஜை விட்டே கூடப் போயிருக்கிறார்கள். சிலர் அறை மாறியதோடு சரி. பின்னர் அவன் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்ததுகூட இல்லை. ஒருத்தரிடம் கை நீட்டியபோது அடிவிழுந்தது என்று கூடக் கேள்விப்பட நேர்ந்தது. கிணற்றடியில் அவனை அப்படியே தொங்கும் வாளியோடு அழுத்தி உயிர் போய் உயிர் வந்தது அவனுக்கு.

இன்னும் ஒருத்தரோ ரெண்டு பேரோ போடுங்க…நானா வேண்டாம்ங்கிறேன்…என்னால மொத்த வாடகையும் தர முடியாது… என்று அடம் பிடித்தானாம். பின்னர் வாகாக ஒருத்தன் கிடைத்தான் சுப்பிரமணிக்கு. அவனோடுதான் மேற்படி சண்டை.. அவனே எதிர்பார்க்கவில்லை. தப்புக் கணக்கு.

முத்தம் கொடுத்தா அழண்டு போயிடுவாடா அவ என்று சொன்னேனல்லவா…அது யாமினி. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். இப்போ அவன் கண் வச்சிருக்கிறது பேரு நந்தினில்ல…! அதுக்கு சொன்னேன்.

அவ பேரே எனக்குப் பிடிக்கும்டா….நா பேசாம அவ ஆபீசுக்கு மாறப் போறேன்…என்றான் சுப்பிரமணி. மூணு வருஷத்துக்கு ஒரு முறைதான் மாறுதல். இடையில் மாறுதல் என்றால் அது அலுவலருக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டும். அதாவது வேலைத் தரம் மிகக் குன்றி இருந்தால் அது நடக்கும். ஆனால் சுப்பி எப்படியோ மாறுதல் வாங்கி விட்டான். கில்லாடி அவன். ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் விடமாட்டான். அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குப் போய் அங்கு உள்ள ஒருவரிடம் பேசி, அவருக்கு தன் ஆபீசுதான் வீட்டிற்குப் பக்கம், ஒரே பஸ்ஸோடு முடியும், வேலை கம்மி, முக்கியமில்லாத சீட், என்று எதை எதையோ சொல்லி, இருவரும் சேர்ந்து ஒரே விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டு மனமொத்த மாறுதல் என்று பெயர் பண்ணி, சென்னையிலிருந்து ஒருவர் மூலமாய் வேறு ரெக்கமன்ட்டேஷனாக ஃபோன் பண்ணச் சொல்லி, காரியத்தை முடித்தே விட்டான்.

அதற்கு அடுத்த காட்சியாய் அவனை யாமினியோடு முக்கொம்பில்தான் நான் பார்த்தேன். என்னைத் தேடி வந்திருந்த என் நண்பர்களோடு நான் ஊர் சுற்றக் கிளம்பியபோது, எங்கெங்கே சென்றேனோ அங்கெல்லாம் அவனை யாமினியோடு பார்க்க நேரிட்டது. யாரும் பார்க்காத, யார் கண்ணிலும் படாத, பாலத்துக்கு அடியில், ஓரத் திட்டில் அவன் மடியில் அவள்.

பொதுவாகத் திருச்சியில் ஊர் சுற்றுபவர்களை ஸ்ரீரங்கம், திருவானைக்கா, வயலூர், மலைக்கோட்டை, சமயபுரம், முக்கொம்பு அணை, என்று தாராளமாய்ப் பார்க்கலாம். அப்படித்தான் அவனும் கூட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தான். ஒரே ஒரு வித்தியாசம். அலைபவர்கள் பஸ்ஸில்தான் சென்று சென்று வருவார்கள். சுப்பி அவளை ஒரு டாக்ஸி அமர்த்திக்கொண்டு ஜாலி பண்ணிக் கொண்டிருந்தான். காசைப் பஞ்சாய்ப் பரத்துவான்.

யாமினிக்கு அதுதான் ஊரா அல்லது வெளியூரா என்கிற கேள்வியே அப்போதுதான் பலருக்கும் மனசுக்குள் எழுந்தது. அவள் உறையூரில் ஒரு பெண்கள் உறாஸ்டலில்தான் இருக்கிறாள் என்பதும் அது ரொம்பவும் கெடுபிடியான இடம் என்பதும், எங்கு சுற்றினாலும், எப்படி அலைந்தாலும், ராத்திரி ஒன்பதுக்கு வந்து அடைந்து விட வேண்டும் என்பதும், யாமினி அதில் மட்டும் யாருக்கும் சந்தேகம் எழாமல் மெயின்டெய்ன் பண்ணி வந்தாள் என்பதும்தான் உண்மையாயிருந்தது.

கல்யாணம் பண்ணிக் கொள்வது என்பது ஆரம்பத்திலிருந்தே சுப்பிரமணியின் கொள்கையாக இல்லை என்பதால் நன்றாய் சலிக்கும்வரை அவளோடு அலைந்து விட்டு ஒன் ஃபைன் மார்னிங் மதுரைக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

அவன் அப்பா போலீஸ் அதிகாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. எதற்கும் அடங்காத அவுத்துவிட்ட காளைமாடு என்று தண்ணி தெளித்து விட்டார்களோ என்னவோ உள்ளுரிலேயே இருக்க வேண்டும் என்கிற நியதியெல்லாம் அவனுக்கு என்றும் இருந்ததில்லை. திருச்சியில் இருக்கையிலேயே பக்கத்தில் லால்குடி, பெரம்பலூர் என்று போய்விட்டு வருவான். ஒழுங்காய் வேலை பார்த்தால்தானே யாரும் அவனை வேண்டும் என்று சொல்வார்கள். வேண்டாம் என்ற லிஸ்டில்தான் அவன் என்றும் இருந்தான். அவனாகவே விரும்பித் தன்னை அங்கே நிறுத்திக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். அதுபற்றியதான கவலையெல்லாம் அவனுக்கு என்றுமே இருந்ததில்லை. இல்லையென்றால் இப்படி நாலுங்கிடக்க நடுவில் மதுரைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு வருவானா?

அந்த யாமினி இருக்குதா?

இருப்பா, இல்ல இல்லாமப் போறா…எவனுக்கென்ன? அந்த நாயைப்பத்தி ஏண்டா ஏங்கிட்டக் கேட்குற? –

அதிர்ந்து போனேன் நான்.

புதிய அலுவலகத்தில் தனக்கு நெருக்கமானவனாக என்னைக் காண்பித்துக் கொண்டான். இவனுக்கு இப்படி ஒரு நண்பரா? என்றுதான் எல்லோரும் என்னை நினைத்திருப்பார்கள். சிவனே என்று நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பவன் நான்.

இப்படித் தடாலடியாய் ஒருவரை தூக்கிவிட்டு விட்டு வந்து உட்கார்ந்திருக்கும் சுப்பியை எல்லாரும் சற்று பயத்தோடுதான் பார்த்தார்கள். தயங்கி ஒதுங்கினார்கள். அவன் தூக்கிவிட்ட நபர் தற்போது திருச்சியில் இருக்கிறார். தலைவிதி என்று போனவர்தான்.

அவர் மூலமாகத்தான் தெரியவந்தது யாமினிக்குக் கல்யாணம் ஆகி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் செட்டில் ஆகி விட்டாள் என்று. சுப்பிரமணி கை விட்டாலும் சுப்பிரமணியபுரம் கிடைத்திருந்தது அவளுக்கு. அதற்குப் பின்னும் அவளோடு சுற்றுவதற்கு முயற்சித்த வேளையில்தான் அடியும் உதையும். யார் கொடுத்திருப்பார்கள்? நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இந்தக் கண்றாவியை வேறு வாய்விட்டுச் சொல்ல வேண்டுமா?

ரொம்ப ஓவர் என்று அவன் பெரியப்பா இருக்கும் ஊரான இந்த மதுரைக்கு அவனைக் கொண்டுவந்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ளுவதாக பேச்சு ஆகியிருப்பது தெரியவந்தது. திருச்சிக்கு மாறுதலில் சென்ற காசிநாதன் மூலம்தான் எல்லா விபரமும். படு லொக்காலிட்டி என்றார் அவர்.

அங்கே யாமினி. இங்கே நந்தினி. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். அவன் கதை என் ஒருவனுக்குத்தான் தெரியும்.

யப்பா சாமி…உன் ஆட்டத்தையெல்லாம் இங்க வச்சிக்காத…டின் கட்டி அனுப்பிடுவானுங்க….

அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

அதென்னடா அப்டி நோங்குறாங்க எல்லாரும்….பிள்ளை….சரியான பார்ட்டிடா அது….என்றான். பிள்ளை பிள்ளை என்பது திருச்சியில் அழைக்கும் பாங்கு என்பதால் அதெல்லாம் நிறுத்து என்றேன். என் ஒருவனைத்தானே அவன் அப்படி அழைத்தான். எதற்கு அந்த நெருக்கம் என்றிருந்தது எனக்கு. சொல்லப் போனால் சற்று பயமாய்த்தான் இருந்தது. இவன் அடிக்கப்போகும் லூட்டியில் என்னை எதிலாவது இழுத்து விட்டு விடக் கூடாதே என்று பயந்தேன்.

என்னா சுந்தரு….ஒன் ஆளு படு சல்லியா இருப்பான் போல…என்றார்கள் அலுவலக நண்பர்கள் சிலர்.

என்ன? என்றேன் நான்.

ரயிலடி பக்கத்து லாட்ஜ்லேர்ந்து வர்றாம்ப்பா அவன்….அதுக்குள்ளேயும் எந்தெந்த எடம்னு தெரிஞ்சிட்டாம்போல……

அதுக்கு நா என்னங்க பண்றது…? எங்கிட்டக் கேட்டா? என்றேன் அப்பாவியாய்.

அது சரி…ஆளப் பார்த்து இருக்கச் சொல்லு…நீயும் பார்த்து இருந்துக்கப்பூ……

அவர்கள் சொல்லி நாலு நாள்தான் ஆகியிருக்கும். அன்று கந்த சஷ்டி என்று திருப்பரங்குன்றம் போயிருந்த நான் அங்கே சுப்பிரமணியைக் கூட்டத்தோடு கூட்டமாகக் கண்டேன்.

என்னாச்சு ஆள் மாறிட்டானா? என்றிருந்தது எனக்கு. தன்னந்தனியாய்? அதுவும் நெற்றியில் விபூதி, குங்குமம் திகழ கையில் அர்ச்சனைத் தட்டோடு…யாரைப் பின்தொடர்கிறான். ஏன் இத்தனை வேகமாய்ப் பாய்கிறான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு நானும் முன்னேறினேன். எங்கே தலையாய்த் தென்படும் இடத்தில் ஆள் மறைந்து விடுவானோ என்று அவனின் மஞ்சள் கலர் சட்டையை அடையாளம் வைத்துக் கொண்டு பின் தொடர்ந்தேன்.

பாய்ந்து, பாய்ந்து, ஆட்கள் சங்கடமாய்த் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு விலக்கிக் கொண்டு இடது புறம் தெப்பக் குளம் இருக்கும் பகுதியில் இறங்கி, ஒரு பாக்கெட் பொரியை வாங்கிக் கொண்டு மீன்களுக்குப் போடுவதற்காகக் காத்து, ஒதுங்கி, முடிந்தவரை கூட்டத்தில் என்னை மறைத்துக் கொண்டு நின்றிருந்த வேளையில் குளக்கரையிலிருந்து மேலேறி வந்தவர்களை வியப்பாய்ப் பார்த்தவாறே நெருங்குவதற்குத் தயங்கியவனாய் தன்னை மனிதத் தலைகளுக்குள் மறைத்துக் கொண்டு அவர்கள் பின்னாலேயே தொடர்வதற்குத் தயங்கியவனாய் நின்றிருந்த சுப்பிரமணியைத் தவிர்த்துவிட்டு, யார் அவர்கள் என்று கூர்ந்து நான் நோக்க முற்பட்டபோது, அது அந்த இருவராக இருப்பார்கள் என்று நானும் ஏன் நீங்களும் கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

என்ன செய்வது? நாம் எதிர்பார்ப்பதெல்லாமா நடக்கிறது இந்த உலகத்தில்? எல்லாமும்தான் நடக்கிறது. எது எதுவெல்லாமோதான் நடக்கிறது. எல்லாவிதமாகவும்தான் இந்த உலகம் இருக்கிறது. எதையும்பற்றி எந்த அதிர்ச்சியும் கொள்ளத் தேவையில்லைதான். ஏனென்றால் எதுவும்தான் நடக்குமே இங்கே!

அங்கே போய்க் கொண்டிந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்வியோடு இந்தக் கதையை முடித்து வாசகர்களுக்கு ஒரு போட்டி என்று அறிவித்து விடலாமா?

அடுத்த பத்தாவது நாள் எங்கள் அலுவலகத்திற்கு ஆடிட்டிங் வந்திருந்த தணிக்கையாளர்கள் முதல் அப்ஜெக்சனாக எழுதியது இதுதான்-

தனியாரிடமிருந்து வசூலிக்கப்பட்ட இயந்திரங்களுக்கான வாடகைப் பணம் மறுநாளே வங்கியில் உரிய கணக்குத் தலைப்பில் செலானிட்டுச் செலுத்தப் பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாமல் பதினைந்து நாட்கள், ஒரு மாதம் என தாமதமாகச் செலுத்தப்பட்டுள்ளது. அனுதினமும் வசூலிக்கப்படும் தொகை ரொக்கப் பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டு, மறுநாள் செலவு காண்பித்து நேர் செய்யப்பட வேண்டும். வரவு காண்பிப்பதிலும் தவறுகள், தாமதங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திர வாடகைக்கென தனியாருக்கு வழங்கப்படும் ரசீதுகள் எந்தத் தேதியிடப்பட்டதோ அதே தேதியிலேயே வரவுக்குக் கொண்டு வரப்படாமல் இஷ்டம்போல் தாமதமாக வரவு வைக்கப்பட்டு, தாமதமாக வங்கியில் செலுத்தப்பட்டு நடைமுறைப் பிறழ்வு நிகழ்ந்துள்ளது. தணிக்கைக் காலத்திலிருந்து முதல் பனிரெண்டு மாதங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் வசூலிக்கப்பட்ட தொகை இதுவரை வங்கியில் செலானிட்டு செலுத்தப்படவில்லை. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, தணிக்கைக் குழுவுக்குத் தெரிவிக்கவும். கீழ்க்கண்ட தொகை சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து ஒரே தவணையில் பிடித்தம் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டு அசல் சலானை தணிக்கைக் குழுவின் பார்வைக்கு சமர்ப்பிக்கவும்..”

இது நடந்து இரண்டாவது நாள் கேஷியர் குமரேசன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அலுவலரின் நெருக்கத்தில் மேலாளர் மயிலேறி தப்பினார். அன்றாடம் ரொக்கப் பணப் பதிவேட்டை அவர் ஆய்வு செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால் வரவும், செலவும் சரிசெய்யப்பட்டிருக்குமல்லவா? அவருக்குத்தான் பாஸ் வேலையே சரியாக இருக்கிறதே! இதைவிடவா ஒரு சலுகை வேண்டும்? அத்தோடு கொடுக்கல், வாங்கல் வேறு…யாரோடு?…யாரோடு என்ன யாரோடு…இதையெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? புரிஞ்சிக்குங்க…

அந்த வாரக் கடைசியில் உடல் நலமில்லை என்று நீண்ட மருத்துவ விடுப்பு விண்ணப்பத்தை நந்தினியின் தகப்பனார் வந்து கொடுத்து விட்டுப் போனார். நிச்சயம் பிறகு அவள் அந்த அலுவலகத்திற்கு மீண்டும் வரமாட்டாள் என்று எங்களுக்குப் புரிந்தது.

நம்ம கைக்கு அகப்படாம கிளி பறந்தது இதுதான் லைஃப்லயே மொத வாட்டி பிள்ளை….என்றான் சுப்பிரமணி!!! அடுத்தாற்போல் அவள் மாறுதல் எங்கே என்று காத்திருந்தான்.

------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...