18 ஏப்ரல் 2024

 

'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in)

-----------------------------------------------------------------------------------------------------------



குற்றம் புரிந்தவன்” சிறுகதைத் தொகுப்பு -  

 

தாயைப் பிரிந்து இருக்க இயலாமை, தந்தையின் தியாகங்கள், இளமை தந்த திமிரில் இனம் புரியாமல் எழுந்த தீஞ்செயல்கள், அதனால் மனமுடைந்த பெற்றோர், நட்பில் விழுந்த கீறல், எதில் நிறைவு கொள்ளுதல் என்பதில் மனம் சார்ந்து எழும் கேள்விகள், ஒன்றை, ஒருவரை நேசித்தல் என்பது மனதளவில அழிவில்லாதது எனும் தன்மை, நெருக்கமானவை, உயிரானவை அந்நியப்பட்டுப் போகுதல், எளிய மனிதனின் அன்றாடப் பாடுகள், வயது முதிர்ந்தும், மனம் முதிராமையின் விளைவுகள், மனசு எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நினைத்துத் தவிக்கும், அலைபாயும் இயல்புடைமை என்று வெவ்வேறு திசைகளில் இதமாயும், பதமாயும்  பயணிக்கிறது இத் தொகுப்பு.

                                                                                                            உஷாதீபன்

 

 

சமர்ப்பணம்

-----------------

பெற்றோர்களுக்கு


16 ஏப்ரல் 2024

 

“தபால் ரயில்“  – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை  - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.


          
ஞ்சலட்டை நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதைப் பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உறவுகளுக்குக் கடிதம், நண்பர்களுக்கு, பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம், ஏன்…காதலிக்கு ரகசியமாய்க் கடிதம் என்று கூட  அது வலம் வந்த கதைகள் நிறைய உண்டு. இந்த அஞ்சலட்டை புழக்கத்திற்கு வந்த காலம் 19-ம் நூற்றாணடின் பிற்பகுதி என்று சொல்லப்படுகிறது.

            இக்கடிதம் படித்தவுடன் இருபது பேருக்கு இதனைப் பகிர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையில் துன்பம் நேரிடும்…என்றும்….இறையருளைப் பெற…இக்கடிதத்திலான ஸ்தோத்திரங்களை அவரவர் பத்துப் பத்துப் பேருக்கு எழுதி அனுப்புமாறும் அதன் மூலம் அந்த பாக்கியவான் அளவிலடங்கா செல்வம் பெறுவார் என்றும் அஞ்சலட்டைகள் பலருக்கும் வந்ததுண்டு. அதைக் கண்டு பயந்து செயல்பட்டவர்களும், பதுங்கி மறைந்தவர்களும் நிறைய உண்டு.

            பெரியவர், காலம் சென்ற திகசி அவர்கள் எனது முதல் சிறுகதைத் தொகுதியான “உள்ளே வெளியே“ தொகுதியை சிலாகித்து நெருக்கி நெருக்கி ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அது அவரது  பெருந்தன்மை. அந்தக் கடிதம் அளித்த ஊக்கம் அளவிடற்கரியது என்று சொல்லலாம். அதுபோல் சுந்தர ராமசாமி அவர்கள் தனது உடல் நலம் பற்றித் தெரிவித்து மனதுக்கு மிக நெருக்கமாக எழுதிய ஒரு அஞ்சலட்டையும் என்னிடம் உண்டு. அந்த ஒன்றுதான் அவரோடு எனக்குக் கிடைத்த தொடர்பு.  வண்ணதாசனின் கடிதங்களைப் படித்திருக்கிறீர்களா? சு.ரா. அழகிரிசாமிக்கு எழுதிய கடிதங்கள், கி.ரா,வுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் புதுமைப் பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் என்று நிறையப் பொக்கிஷங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அஞ்சலட்டையே. அவையே பெரும் இலக்கியங்கள் எனலாம். பெருமை தரும் இலக்கியங்கள் என்றும் மகிழ்ந்து போற்றலாம்.

            இப்படி மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து நிற்கும் அஞ்சலட்டையின் வரலாறு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும்.

            உறவுகளை மதித்து அஞ்சலட்டைக் கடிதங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. உடனே கிழிக்க மாட்டார்கள். அது மரியாதைக் குறைவான செயல் என்கிற ஒழுக்கமான எண்ணமிருந்த காலம் அது. துக்கச் செய்தியைத் தாங்கி வரும் கார்டுகளை மட்டும் படித்தவுடன், தகவல் அறிந்தவுடன் கிழித்து விடும் பழக்கம் உண்டு.

            அப்பாவோட அந்தக் கால மரப்பெட்டியைப் பார்த்தீங்கன்னா அதுல கட்டுக் கட்டா அஞ்சலட்டைக் கடிதங்கள் இருக்கும். அதப் பொக்கிஷமா பாதுகாப்பாங்க…அந்த அஞ்சலட்டையை வைத்து ரயில் செய்து குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பெரியவர்கள் நம் வீட்டில் உண்டு. குறிப்பா அப்பா தன் குழந்தைகளுக்கு அந்தக் கார்டை மடக்கி மடக்கித் தரையில் தொடர்ச்சியாக நீள  அடுக்கி முதல் கார்டைத் தள்ளிவிட, அது வரிசையாகச் சாயும் அழகு ரயில் போவதை நினைவு படுத்தும்.

            இதை “தபால் ரயில்“ என்று தலைப்பிட்டு தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் அற்புதமான ஒரு சிறுகதையை வடித்திருக்கிறார். அவர் முகம் நமக்கு நினைவுக்கு வரும்போது, ஜெயகாந்தன் அவர்களும் மனதில் தோன்றுவார். உருவ ஒற்றுமை…கொஞ்சம் ஊன்றிப் பார்த்தால்தான் அது கவிராயர் என்பது புலப்படும். இந்த அஞ்சலட்டை எத்தனை விதங்களில் பயன்பட்டிருக்கிறது என்பது இக்கதையில் விவரிக்கப்படுகிறது. மகிழ்ச்சி, சோகம், துக்கம்…நட்பு…உறவு…ஆகியவைகளை இது ஒன்று சேர்க்கிறது. ஒரு கதையை விமர்சனம் செய்வது என்பது அக்கதையை அப்படியே படித்த வழி சொல்வது என்பதை விட அதிலுள்ள சிறப்பம்சங்களை விவரித்து, அதை உடன் தேடிப் படிக்கத் தூண்டுவதே நன்று என்று நான் நினைக்கிறேன்.

            சோக பாவத்திற்குதான் இலக்கியத்தில் அதிக மதிப்பு உண்டென்பேன் நான். சென்டிமென்டான விஷயங்கள் நன்றாய் எடுபடும். கதைகளிலும். நாவல்களிலும், திரைப்படங்களிலும் இதற்கான பெருமையே தனி. இதனால் வெற்றியடைந்த திரைப்படங்கள் அநேகம். காரணம் சோக பாவம்ங்கிறது நன்னெறிகளை அடிப்படையாகக் கொண்டது. அன்பு, பாசம், நட்பு, உறவு, சிநேகம், நன்மை, கருணை இப்படிப் பலவற்றையும் தாங்கி வருவது.

            இந்தக் கதைல அஞ்சலட்டைக்கான மதிப்பும் மரியாதையும் சின்னச் சின்னச் சம்பவங்களால் சரம் சரமாகக் கோர்க்கப்பட்டுள்ளது. ஒரு அஞ்சலட்டையை போஸ்ட்மேன் கொடுத்துட்டுப் போனாலே அந்த வீடே ஏதோ செல்வம் கிடைச்ச மாதிரி அன்றைக்கு சந்தோஷத்துல மூழ்கிக் கிடக்கும். சோகச் செய்தியைத் தாங்கி வந்தாலும் வீடே இருண்டு போன நிகழ்வுகளும் உண்டுதான். ஆனால் வயதில் பெரியவர்கள் இளையோர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் ஆலோசனைகளை மன நெருக்கமாக பாசத்தோடும் நேசத்தோடும் சொல்லி, தைரியப்படுத்தி எழுதும் பதில் கடிதங்கள் மிகவும் முக்கியம். அந்தப் பதில் கடிதங்கள் மூலம் ஊக்கம்பெற்று, மனம் தளராது செயல்பட்டு தங்கள் காரியங்களில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம்.

            மனதை நெருடும் விஷயங்கள் இக்கதையில் பல இடங்களில் உண்டு

ரேவதி அக்காவுக்கு ரொம்ப வருஷங்களாகவே கல்யாணம் ஆகவேயில்லை. எப்போதும் பாசி படிந்த தண்ணீர்த்தொடடியைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும்…இந்த வரிகளைப் படிக்கும்போது அந்தப் பெண்ணின் உருவமும், ஏக்கமும், சோகமும் நம் மனதில் நிழலாடும்.

ரேவதி அக்கா கையெழுத்தும் தபால் ரெயிலில் ஓடும். ஓடும் நிஜ  ரயிலில் ஜன்னலில் தெரிந்தவர் முகத்தைப் பார்ப்பதுபோல் ரேவதி அக்கா முகம் தெரியும். இதமான கற்பனை இது என்பதை மறுக்க முடியாது.

சில கார்டுகள் தபால் ரெயிலில் சேராது விழுந்து விடும். இதற்கும் எழுதியிருக்கும் விஷயத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ…? பின் அவை மட்டும் நிற்காமல் விழுவானேன்….

கார்டுகளுக்கும் மனம் உண்டு, உணர்ச்சி உண்டு, உயிருண்டு என்று காட்டும் இடம் இது. எழுத்தாளரின்  மன உணர்வுகள் பேசும் இடம் இது.

எந்தப் பிரச்னையானாலும் தீர்த்து வைக்க அப்பாவுக்கு ஒரு கார்டு போதும். இது சத்தியமான  உண்மை. அஞ்சலட்டைகள் அதுவும் அப்பாவிடமிருந்து, அம்மாவிடமிருந்து வந்த மனதுக்கு நெருக்கமான வரிகளைத் தாங்கிய கடிதங்கள் சட்டைப் பையில் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து ஊக்கத்தோடு செயலாற்ற உதவியிருக்கின்றன.  நேரடியான வாய் வார்த்தைகளை விட இந்தக் கடிதங்களின் வரிகளுக்கு சக்தி அதிகம்.

            பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் அவைகள் என்றே கூறலாம். ஆனால் எத்தனை பேர் அவைகளைப் பொக்கிஷங்களாக வைத்திருக்கிறோம்? காலம் நம்மை எங்கெங்கோ கடத்திக் கொண்டு போய் எறிந்து விடுகிறது. விழுமியங்களாக விஷயங்களை நாம் நிறையத் தவற விட்டிருக்கிறோம். இப்போதும்  தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

            அதில் பழம் பெரும் தபால் அட்டைகளை, ஐயோ…அநியாயமாக் கிழிச்சி எறிஞ்சிட்டமே…காணாமப் போக்கிட்டமே…! என்று வருத்தமேற்படுத்தும் பல முக்கியக் கடிதங்கள்  நம் மனதை நெருடிக் கொண்டுதான் இருக்கின்றன.

            கடிதங்கள் மிகப் புனிதமான விஷயங்களைத் தாங்கி நின்று ஜெயித்ததுண்டு.  நேற்று தஞ்சாவூர் திலகர் திடலில்  மகாத்மா காந்திக்கு வரவேற்புக் கொடுத்தோம். நான் கொடுத்த கதர்ச் சட்டையை வாங்கிக் கொண்டார். அன்று மௌன விரதம்…என்னும் நண்பர் சிவப்பிரகாசத்தின்  அஞ்சலட்டை வரிகள் காலத்தின் அழியா அடையாளங்களில் ஒன்று என்று நான் உணர்கிறேன். தேசீயமும் தெய்வீகமும் கருத்தூன்றி நின்ற காலம் அது.

            குழந்தை பாக்கியம் இல்லாத ரங்கராஜனின் புதல்வரின் பார்வையில் இக்கதை விரிந்து பரந்து நிற்கிறது. வாழை என்கிற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு அன்பளித்த தொகைக்கு நன்றி தெரிவித்து அவர்களிடமிருந்து வந்த கடிதம் இவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிறது. அவர்களுடன் சிற்றுண்டி அருந்தச் செல்லும் செய்தியில் திருப்தி கொள்கிறார்கள் இருவரும்.

            சேகரித்து வைத்திருந்த கார்டுகளை வைத்து ரயில் செய்து விளையாடி ஆறுதல் கொள்கிறார்கள்.  கடைசிக் கார்டைத் தள்ளிவிட்டு அது வரிசையாய்ச் சாய்ந்து விழும் காட்சி ரயில் ஓடும் குதூகலத்தை மனதில் ஏற்படுத்த, அவர் மனைவி குழந்தைபோல் துள்ளிச் சிரித்து மகிழ அந்த சந்தோஷத்தில் தன்னை மறக்கிறார் இவர்.

            எனக்கு நீ குழந்தை…உனக்கு நான்….. என்கிற முதிர்ச்சி அலைகளோடு கதை முடிவடைகிறது.

            தஞ்சாவூர் கவிராயரின் நேசமான  கருணை மனம், அன்பின் செழுமை, அனுபவ முதிர்ச்சி இந்தச் சிறுகதையின் மூலம் அவரை நமக்குத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.

            நன்றி…!

                                                ------------------------------------

 

06 ஏப்ரல் 2024

 

வழி விட்டவள் - சிறுகதை - பிரசுரம் தினமணி கதிர் 07-04-2024

வழி விட்டவள்






ன்னோட கொஞ்ச நேரம் அங்க உன்னால உட்கார்ந்திருக்க முடியுமாம்மா?- -என்று  கேட்டான் சந்துரு.

வெயில்ல நடந்துட்டே இருந்தாத்தான் தலை சுத்தும். விழுந்துடுவோமோன்னு பயம்மா இருக்கும். உட்கார்ந்திருக்கிறதுக்கு என்ன? – பிச்சு என்கிற பிச்சம்மாள் பையனைப் பார்த்துச் சொன்னாள். தன் நிலை உணர்ந்து அவன் கேட்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அதுக்கில்லம்மா….அங்க திண்ணைல உன்னை உட்கார்த்திட்டு, மாடிக்குப் போய்  நான் ஜாதகப் புத்தகங்களைக் கேட்டு வாங்கி…எழுத ஆரம்பிக்கணும்…குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்…எதிர்த்தாப்புல ஐயப்பன் கோயில் இருக்கில்லையா…அங்க ராஜேந்திரா காபிக் கடை…இருக்கு….  வாங்கிட்டு வர்றேன். சூடாக் குடி…தாங்கும்….அப்புறம் நான் மேலே போய் எழுத  உ ட்கார்றேன்….சரியா…..? உன்னால மாடிப்படி ஏற முடியாது. ஒடுக்கமா பலகைல படி அமைச்சிருப்பாங்க அங்கே…! அதனால சொன்னேன்…

 காப்பி எதுக்குடா கண்ணா?   இந்த ஃபிளாஸ்க்ல வெந்நீர் வச்சிருக்கனே…அது போறாதா? கொண்டு வந்த பிளாஸ்கைக் காட்டினாள் பிச்சு.

இப்டித் தொட்டதுக்கெல்லாம் காசு செலவழியுமேன்னு பார்க்கப்பிடாது.  வெளில வந்தா…தேவையானதை சிலது செய்யத்தான் வேண்டியிருக்கும்.  வெட்டிச் செலவுன்னு நினைக்கப்படாது. உட்காரு இங்கே…இதோ வர்றேன்…..என்று சொல்லிவிட்டு, அந்தக் கடையை நோக்கி நடந்தான் சந்துரு.

உள்ளே நேர் உறாலில் மேஜை போட்டு உட்கார்ந்திருப்பவர் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே   பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஜாதகம் பதிவு பண்ணியிருக்கேளா? கேட்டார்.

ஜாதகமும் பதிவு பண்ணியிருக்கோம்…மாசப் பத்திரிகைக்கும் பணம் கட்டியிருக்கோம்…..-பிச்சு அவரைப் பார்த்துச் சொன்னாள்.

அப்போ எதுக்கு  இங்கே வந்து எடுத்துண்டு. அதான் தபால்லயே வருமே?

அது போறலை…ஒண்ணும் அமையலை….இங்க நிறைய இருக்குமாமே…என் பையன்தான் சொல்லி கூட்டிண்டு வந்தான்.

அது சரி….நீங்க எதுக்கு அலையறேள் இந்தப் பதைபதைக்கிற வெய்யில்ல…? …அவன் குறிப்புகளை எடுத்துண்டு வரமாட்டானா?

வருவான் மாமா….இங்கே கோயிலுக்கு வந்தோம்…அப்டியே இதையும் முடிச்சிண்டு போவமேன்னு…நல்ல ஜாதகமா இருந்தாச் சொல்லுங்களேன்…எம் பொண்ணுக்கு….பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா…வைதேகின்னு பேரு…

அப்டியா….இந்தக் காலத்துல எல்லாம் ஐ.டி. சாப்ட்வேர் இன்ஜினியர்ங்கிறா…அவாளுக்கே பையன் ஜாதகம் கிடைக்க மாட்டேங்குறது. பசங்களுக்கு ஏத்த பெண் ஜாதகமும் வறட்சிதான். வெறும் டீச்சருக்கு என்ன கிடைக்கும்?-அவர் பரிதாபப்படுகிறாரா அல்லது பரிகாசம் செய்கிறாரா? – பிச்சு அவரைக் கருணையோடு பார்த்தாள். வெறும் டீச்சர் என்றால்? என்ன அர்த்தம்? யோசித்தாள்.

என்னவோ மாமா…ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல வேலை பார்க்குற கிளார்க் கிடைக்க மாட்டானா? அதுக்குக் கூடவா என் பொண் தகுதியில்லாமப் போயிட்டா?

அவனும், வர்றவ தனக்கு சமமா சம்பாதிக்கணும்…அப்பத்தான் வண்டியோட்ட முடியும்ங்கிற நிலைமை வந்தாச்சு….ஏன்னா முன்னமாதிரி பென்ஷன் கிடையாதோல்லியோ? இப்பத்தான் பங்கு பென்ஷன்ங்கிறாளே? அதுவும் கைக்குக் கிடைக்காமே நிறையப் பேர் திண்டாடிண்டிருக்கா? இப்டியிருக்கச்சே…பிரைவேட் ஸ்கூல் டீச்சரை யார் கட்டுவா சொல்லுங்கோ….?

பிச்சு அமைதியானாள். இவரென்ன இப்படிப் பேசறார்? என்றிருந்தது. அவாவாளுக்குன்னு கடவுள் ஒண்ணைப் போட்டு வச்சிருக்க மாட்டாரா? அந்த அவனைக் கண்ணுல காமிக்காமயா போயிடப் போறார்? பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அம்மா…இந்தா..சூடு ஆர்றதுக்கு முன்னாடி குடி….-சொல்லியவாறே காபிக் கப்பை நீட்டினான் சந்துரு. இருக்கும் சூட்டில் பிளாஸ்டிக் கப்பு நெளிந்தது. சற்று அழுத்திப் பிடித்தால் எகிறிச் சிதறி விடும். பார்த்துப் பதவாகமாய் வாங்கி உதட்டில் வைத்து உறிஞ்சினாள் . போன உசிர் திரும்பி வந்தது போலிருந்தது.

முன்னால நிக்கிறது நகர்ந்தாத்தானே அடுத்தடுத்து வெளியேறும்…அதுக்கு நல்ல நேரம் வரணும்…

பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள். இந்தப் பாழாப் போனவ லேசுல வெளியேற மாட்டா போல்ருக்கே…! இப்படி எத்தனையோ முறை நினைத்துக் கொண்டாயிற்று.  அதுவே பாவம். அவளென்ன செய்வாள் இதற்கு? அமைந்தால்தானே?

து வேண்டாம்…அது வேண்டாம்னு ஒவ்வொண்ணையும் ஒதுக்கித் தள்ளினா…அப்புறம் உன்னை ஒதுக்க ஆள் வராதுன்னு நினைச்சியா?

அதுக்காக? எனக்குப் பிடிக்கலைன்னாலும் சரின்னு சொல்ல முடியுமா? என் மனசுக்குப் பிடிக்கணும்…அப்பத்தான் ஒத்துக்குவேன்…ஆள் அழகு பார்க்கலை நான்…அவன் பேச்சு குணம் எப்டியிருக்குன்னு பார்க்கிறேன்…அஞ்சு நிமிஷம் பேசினேன்னா,  லட்சணம் தெரிஞ்சு போகும் எனக்கு…ஒத்துப்போமா வேண்டாமான்னு….! குறைஞ்ச சம்பளக்காரனா இருந்தாலும் பரவால்ல…சிக்கனமா இருந்து சமாளிச்சிப்பேன். பொறுப்பான ஆளாங்கிறதுதான் முக்கியம்….உனக்கெப்படி அப்பா அமைஞ்சார்…ஆயிரம் கஷ்டம் வந்தாலும் கலங்காத மனுஷனா நீ பிடிச்சிட்டே….நானும் அப்டி ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கணும்னு நினைக்கிற போது அதிலென்ன தப்பு?  ஏன் அலுத்துக்கிறே? உனக்கென்ன அப்டி அவசரம்? என்னை வீட்டை விட்டு சீக்கிரம் கழுத்தைப் பிடிச்சு தள்றதுதான் உனக்குக் குறிக்கோளா? நான் வெளியேறிட்டேன்னா மத்ததெல்லாம் சரியாயிடுமா? உன் கஷ்டமெல்லாம் தீர்ந்திடுமா? உன் தரித்திரம் போயிடுமா? கொஞ்சம் பொறு…எனக்கேத்த ஆளாப் பார்த்துத் தேர்ந்தெடுத்துண்டு நானே போயிடுறேன்…அதுவரை கொஞ்சம் பொறுமையாயிரு…..! குணநலன்தான் எனக்கு முக்கியம். பணநலனில்லே…! அது அளவா இருந்தாப் போதும்…சமாளிச்சிப்பேன். அந்த தைரியம் எனக்கு உண்டு. எனக்கப்புறம் மீதம் ரெண்டு பேர் இருக்காங்கிற நினைப்பும் உண்டு…பொறுப்பும் உண்டு…புரிஞ்சிதா?

யப்பா…யப்பா…யப்பா…என்னா வாய்டீ உனக்கு? ஆனாலும் சாமர்த்தியம்தாண்டீ நீ! ஒண்ணு சொன்னா ஒம்பது பேசறியே? எங்க காலமெல்லாம் இப்டியில்லடியம்மா? யாரக் கை காட்டுறாளோ அவாதான்…மறு பேச்சுப் பேசாம தலையை நீட்டணும். மறுத்துப் பேசினா கலகம்தான்….இந்தக் காலத்துல நீங்கல்லாம் இப்டி நீட்டி முழக்கி பேசுவேள்னா நாங்க மூணோடயே நிறுத்தியிருப்போம்…பொண்ணு வேணும்…பொண்ணு வேணும்னு அதுவும் ஒண்ணுக்கு மூணாப் பெத்துத் தள்ளியாச்சு…ஊரெல்லாம் ஏழெட்டுப் பத்து அலையறதேன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டோம். .இப்போ முழிச்சிண்டிருக்கோம்? ஏதோ உபாயமாக் கொடுத்து வெளியேத்துவோம்னா  நீங்க இப்டித் தீட்டிண்டு நிக்கிறதப் பார்த்தா எங்களுக்குப் பெரிய மலைப்பாத்தாண்டியம்மா இருக்கு….ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு நினைக்கணும்…

நீங்க வாழ்ந்து முடிச்சவா…நான் இனிமேதான் ஆரம்பிக்கணும். கைல பிச்சைச் சட்டியத் ஏந்திண்டு அலைய முடியுமா? ஓரளவுக்கு நார்மலா குடும்பம் நடத்தறமாதிரி ஒருத்தன் கிடைக்க வேண்டாமா? அதுக்கு ஒருத்தன் அகப்படாமலா போறான்? மனசுக்கு உகந்தவனா வருவான்….மாட்டுவான்…..

மாட்டுவானா? நல்ல பேச்சுடி….தைரியம்தான் உனக்கு…ரொம்ப நம்பிக்கைதான்…அவன் உன்னை அடக்கி ஆளப் போறானோ அல்லது நீ அவனுக்கு மூக்கணாங்கயிறு போடப் போறியோ? யார் கண்டது….என்னவோ பண்ணிக்கோங்கோ…சலுப்பக் குடியாட்டமா சண்டைக்கு நிக்காம…சமாதானமாக் குடும்பம் நடத்தினாச் சரி….உன் மனசுக்கு எவன் சரியோ அதுதான் எனக்கும் சரி…!

வைதேகியுடனான முந்தைய  சம்பாஷனை பிச்சுவை அதிர வைத்தது. இங்கேயிருந்து எத்தனை ஜாதகக் குறிப்புகள் எடுத்துண்டு போனா என்ன…அவளுக்குப் பிடிக்கணுமே…பொண்ணைப் பையனுக்குப் பிடிக்கிறதாங்கிறதைவிட, பையனை என் பொண்ணுக்குப் பிடிக்கிறதாங்கிறதுதான் இப்போ அதி முக்கியமாப் போச்சு….எப்டி நடக்கப் போறதோ…யாரைத் தேரந்தெடுக்கப் போறாளோ? ஈஸ்வரா….!  - என்று எதிரே  சற்றுத் தள்ளி, உயர் கட்டிடங்களையும் மீறி வானளாவ நின்ற கோயில் கோபுரக் கலசங்களைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் பிச்சு.

பொண்ணு ஃபோட்டோ வச்சிருக்கேளா….? – உள்ளிருந்து குரல் வந்தது மீண்டும்.   பேச்சு நின்று ஒரு மணி நேரம் ஆகப் போகிறது. இதென்ன திடீரென்று? திரும்பிப் பார்த்தாள் பிச்சு.

ஃபோட்டோ இருக்கான்னு கேட்டேன்….அதைத்தானே கொண்டாங்கிறா இப்போ…!  – மறுபடியும் கேள்வி வேகமாய் வந்தது.

இருக்கே மாமா….இதோ….ஒரே ஒரு காப்பிதான் இருக்கு….அதுவும் எப்பயோ எடுத்தது….என்று தான் வைத்திருந்த ஒரு பழைய பர்ஸின் உள் பகுதியில் பார்வையாய் வைத்திருந்ததை உருவி நீட்டினாள் பிச்சு.

ரொம்பப் பழசு போல்ருக்கே…லேட்டஸ்டா எடுத்து ஒரு பத்துக் காப்பி கைவசம் வச்சிக்க மாட்டேளா? இதெல்லாம் சொல்லித் தரணுமா?  .இப்போ உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்? – சளைக்காமல் கேட்டார்.

முப்பது ஆயிடுத்து மாமா….அதான் சொல்றனே…நாலஞ்சு வருஷமாப் பார்த்திண்டிருக்கேன்…அமையலை…என்னைப் பிடிச்சு ஆட்டி வைக்கிறது…என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ…எதிலயும் மாட்டிக்காமே அவர் போய்ச் சேர்ந்துட்டார்..புண்ணியவாளன்…நா மாட்டிண்டு முழிக்கிறேன். இன்னிக்குத் தேதிக்கு இதைவிட அழகாயிருப்பா நேர்ல….நிறம்தான் கொஞ்சம் மட்டு…ஆனா முகம் திருத்தமாயிருக்கும் மாமா….உங்களப் பார்த்த விசேஷம்…எம்பொண்ணுக்கு ஏதாச்சும் ஒண்ணு அமையட்டுமே…உங்களுக்குக் கோடிப் புண்ணியம்…முடிச்சு வையுங்கோ…-கையெடுத்துக் கும்பிட்டாள்.

வருத்தப்படாதீங்கோ….சொல்றேன்…..அதான் இத்தனை நாள் கழிச்சி இங்க தேடி வந்திருக்கேள்…இந்த ஜாதகப் பரிவர்த்தனை சங்கம்பத்தி யாருமே உங்களுக்குச் சொல்லலை போல்ருக்கு? நம்மடவாளுக்குன்னு வருஷக் கணக்கா இயங்கிண்டிருக்கு…தெரியுமோல்லியோ?  இப்பவாச்சும் வழி தெரிஞ்சிதே…எவ்வளவோ பேருக்குக் காரியம் கைகூடின அதிர்ஷ்டமான இடமாக்கும் இது…! புண்ணியச் சேத்திரம்னு சொல்லணும்…

ஆகட்டும் மாமா…உங்க வாய் முகூர்த்தம்….அவளுக்கு மாங்கல்யதாரணம் ஆகணும்…அந்த அம்பாள் மீனாட்சிதான் கருணை செய்யணும்…

ஆகும்…ஆகும்…எல்லாத்துக்கும் வேளை கூடி வரணுமோல்லியோ…..மனுஷப் பிரயத்தனங்கள் மட்டும் போறாதே…!

தேஜஸோடு கூடிய அவர் முகத்தை ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் பிச்சு. நல்லதாவே பேசுறார் மனுஷன்.  பகவானே முன்னே வந்து கேட்குற மாதிரியிருக்கு….நல்ல நேரம்  கூடி வரட்டும்….-நினைத்துக் கொண்டாள். கண்களில் நீர் கசிந்தது.

ஆஞ்சநேயர் கோயில், பஜனை மடம், விஸ்வவிநாயகர் கோயில் ன்னு சனி, ஞாயிறுகள்ல ஜாதகம் சார்ட்டக் கொண்டு வந்து படலம் படலமாக் காட்டத்தான் செய்யுறா….எதுவுமே நமக்குப் பொருந்தி வரலை…முடிஞ்சதெல்லாம் நீக்குவாளோ மாட்டாளோ? பட்டியல் நீண்டுண்டேதான் போறது.  .ஏழெட்டு ஜாதகம்னு கஷ்டப்பட்டு குறிச்சிண்டு போனாலும் லெட்டர் போட்டா பையன்  ஜாதகக் காப்பி அனுப்ப மாட்டேங்கிறா…பதிலே போட மாட்டேங்கிறா…நாமளே பொண்ணு ஜாதகத்தைக் காப்பியா எடுத்து எடுத்து அனுப்பினாலும் பதில் எதுவும் வர்றதில்லை. ஒரு போட்டோ அனுப்புங்கோன்னாவது யாராவது கேட்கமாட்டாளோ? மூச்….நாயா அலைஞ்சதுதான் மிச்சம்…மலப்பா போச்சு மாமா….எங்காத்து மொதப் பொண்ணை என்னைக்கு வெளில தள்றேனோ அன்னைக்குத்தான் விடியல். அப்புறம்தான் மத்ததை நகர்த்த முடியும் என்னால…இன்னும் ரெண்டு வச்சிண்டிருக்கேனே…புத்தி கெட்டவ….! என்ன பண்ணச் சொல்றேள்…பெத்தாச்சு…கழுத்த நெரிச்சா கொல்ல முடியும்? இல்ல விஷம் வச்சுக் கொல்ல முடியுமா? இந்தக் காலத்துல எல்லாரும் ரொம்ப உஷாரா இருக்கா….ஒண்ணே ஒண்ணு…கண்ணே கண்ணுன்னு இருந்துடறா…ரொம்பத் தப்பினா ரெண்டு…கண்ணுல படறது….பெரும்பாலும் ஒண்ணுதான்….ஒண்ணுக்கு ஒண்ணு துணை வேண்டாமோ? வேண்டாம்ங்கிறா…அதுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தா துணை தானா வந்துட்டுப் போறதுன்னு விட்டுட்டா…இந்தப் புத்தி மூத்த தலைமுறைக்கு இல்லாமப் போச்சு பாருங்கோ….

தன்னை மறந்து…அவர் கேட்கிறாரா என்பதைக் கூடக் கவனிக்காமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள் பிச்சு. புலம்பல்தான் என்று மனசு உறுத்திற்று. எந்தவழியிலாவது காரியம் ஆகாதா என்ற ஆதங்கம் தெறித்தது.

அம்மா…வா…போகலாம்….எடுத்தாச்சு……-சொல்லியவாறே கீழே இறங்கி வந்தான் சந்துரு. மரப்படிகளில் இறங்கி வருவது சத்தத்தைக் கிளப்பியது.  அவன்தான் பொறுமையோடு அலைகிறான். விடாமல் ஜாதகங்களை எடுத்து வருகிறான்.  வண்டிக்கு அச்சாணிபோலக் கடமையைச் செய்கிறான்.

ஆச்சா…போகலாமா…? நாங்க வரோம் மாமா….நீங்கதான் சொல்லணும்…தெரிஞ்சவா சொன்னாத்தான் புண்ணியம்….காரியம் ஆகும்…

இருங்கோ…இருங்கோ…நீ எடுத்த குறிப்புகளைக் கொண்டா பார்ப்போம்…என்றார் அவர்.

உள்ளே நுழைந்தான் சந்துரு. அவர் மேஜைக்குப் பின்னே கைலாசநாதன், காரியதரிசி…என்ற போர்டு இருப்பதைப் பார்த்தான்.

ஒவ்வொன்றாகக் குறிப்பாய் கவனித்தார். பிறகு சரி…..கொண்டு போய் உங்க பொண்ணோட ஜாதகத்தோட பொருந்தறதா பாருங்கோ….எட்டுப் பொருத்தம், ஒன்பதுன்னு அலையாதீங்கோ…ஆறு, ஏழு பொருந்தினாப் போதும். குறிப்பா வம்ச விருத்தி வேணும்..அதான் முக்கியம்…கவனத்துல வச்சிக்குங்கோ…என்றவர் ஒரு குறிப்பிட்ட குறிப்பினைச் சுட்டி, இது பொருத்தமா இருக்கான்னு பார்த்திட்டு வந்து எனக்குச் சொல்லுங்கோ….என்றார்.

ஆகட்டும் மாமா…..…-பிச்சு நம்பிக்கையோடு  கிளம்பினாள். வரேன் அங்கிள்…என்று சொல்லிவிட்டு படியிறங்கினான் சந்துரு.

ஒரு நிமிஷம்…உங்க பொண்ணு ஜாதகம் பதிஞ்சிருக்கேளே…அது சீரியல் நம்பர் என்னன்னு சொல்லுங்கோ…கேட்க விட்டுட்டேன்…..

நானூற்றி முப்பத்தியேழு மாமா….வைதேகின்னு பேரு….வோல்டாஸ் காலனில இருக்கோம்…அதான் அட்ரஸ்…..

வந்த கையோடு குறித்து வந்த இடங்களுக்கு எழுதிப் போட்டாயிற்று. இனி பதில் வருமா, போன் வருமா என்று காத்திருக்க வேண்டும். கடிதம் எழுதுவதே குறைந்து போன காலம். இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களுக்கு இன்னும் எழுத்து மூலமான அக்கறை இருக்கத்தான் செய்கிறது. அப்போதுதான் நம்பிக்கையும் வருகிறது. நமக்குத்தான் வேளை வர வேண்டும்.   தினமும் தபால்காரரை எதிர்பார்த்து திண்ணையிலேயே பழி கிடக்க வேண்டும். வெறுமே அவர் கடந்து போகையில்தான் எத்தனை ஏமாற்றம்? இந்த உலகமே இரக்கமற்றதாய்த் தோன்றும் அந்தக் கணம்.

ரு வாரம் கழித்து  மதியம் கடந்த  பொழுதில்….அந்த    ஃபோன் வந்தது.

அதிசயமா இருக்கே…அடடா…சந்துரு கூட இல்லையே…வெளில போயிட்டானே…இந்த நேரம் பார்த்து வருதே…ஈஸ்வரா…என்னவோ ஏதோ….

-மிகுந்த பதற்றத்தோடு அந்தச் சின்னக் கையடக்க சாதா ஃபோனை எடுத்து சந்துரு சொல்லிக் கொடுத்திருந்ததுபோல் பச்சை பட்டனை விரல் நடுங்க அழுத்தினாள் பிச்சு.

உறலோ…உறலோ…என்றாள் ஈனஸ்வரத்தில். லைன் கிடைத்ததா என்ற பதற்றம் வேறு. வேறு என்னென்னவோ சத்தமெல்லாம் குறுக்கிட்டது.  பிறகு நின்றது….லைனில்தான் இருக்கேனா….? யாராயிருக்கும்?

யாரு…பிச்சு மாமி பேசறேளா….நாந்தான் சங்கத்திலேர்நது செக்ரட்டரி பேசறேன். என்னைத் தெரியறதா…? எதிர்க் குரல் சத்தமாக வந்தது.

நமஸ்காரம் மாமா….தெரியாமையா சொல்லுங்கோ…பையன் வெளிய போயிருக்கான்…அதான் கொஞ்சம் பதட்டமா இருந்தது….எடுக்க லேட்டாயிடுத்து…

அதானே பார்த்தேன். மணியடிச்சிண்டே இருக்கேன்னு…பரவால்லே….ஒரு விபரம் சொல்லணும்…அதுக்காகத்தான்…

எப்டி மாமா ஃபோன் நம்பர் கிடைச்சது…? பதற்றம் குறையாமல் கேட்டாள் பிச்சு. 

என்ன இப்டிக் கேட்கிறேள். உங்க பொண்ணு ஜாதகத்துல பின்னாடி எழுதியிருக்கேளோன்னோ….? குறிப்பை வச்சு ஜாதகத்தை எடுத்துட்டேனே? வேறே என்ன வேலை எனக்கு?  மறந்துட்டேளா…! என்னைக்கோ பதிஞ்சது. ஞாபகமில்லை போல்ருக்கு…!

அப்டியா…நினைவில்லே மாமா…பையன்தானே ஃபாரம் வாங்கிப் பதிவு செஞ்சான்…நான் என்னத்தக் கண்டேன்…சொல்லுங்கோ …..- தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு பேசியவாறே  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாடா….என்று ஆசுவாசமாய் இருந்தது.

ஒண்ணுமில்லே….உங்க பொண்ணுக்கு ஒரு ஜாதகம் அமைஞ்சிருக்கு…அதான் சொல்லலாமேன்னு…

அப்டியா மாமா…ரொம்ப சந்தோஷம்…நான்தான் அன்னைக்கே சொன்னேனே…உங்களாலதான் விடியணும்னு….விடிஞ்சிடுத்து மாமா….-சற்றே குதூகலமாய்க் கேட்டாள் பிச்சு. அவர் குரல் நம்பிக்கையளித்தது.

அவா வேத்துப் பிரிவுதான். முதல்லயே சொல்லிப்புடறேன்…ஆனா நம்மடவா….பிரிவெல்லாம் பார்க்கப்படாதுன்னு பெரியவாளே சொல்லியிருக்காளோன்னோ? …தெரியுமோல்லியோ…நல்ல மனுஷாளாங்கிறதுதான் முக்கியம்…தெரிஞ்சிதா…..?

சொல்லுங்கோ மாமா…கேட்டுக்கிறேன்….நீங்க சொன்னா சரிதான்…மேலென்ன கீழென்ன…? பரஸ்பர அன்புதான் முக்கியம்….

இந்தக் காலத்துல என்னென்னவோ நடந்துடறது. ஜாதி விட்டுச் ஜாதி கல்யாணமெல்லாம் சர்வ சகஜமா நடந்துண்டிருக்கு….அதப்பத்தி நாம எதுவும் சொல்ல வேண்டாம்…நம்மடவாள்லயே மேல் கீழ்ங்கிறது பார்க்கப் புகுந்துடறா…? அது பிடாதுங்கிறேன்….நல்ல குடும்பமா, மரியாதையான, பொறுப்பான மனுஷாளா…பையன் பொறுப்பா, சமத்தா  பொண்ணை வச்சுக் காப்பாத்துவானா…குடித்தனம் பண்ணுவானா? …ரெண்டு பேரும் சந்தோஷமாயிருப்பாளாங்கிறதுதான் முக்கியம்….புரிஞ்சிண்டேளா….? இன்னொண்ணு…..

என்னது? அதான் எல்லாம் சொல்லிட்டேளே…மாமா? -படபடத்தாள் பிச்சு.

பார்த்தேளா…அதுக்குள்ளேயும் பதட்டப்படுறேளே…பையனுக்கு சித்தே வயசுஜாஸ்தி…முப்பத்தியெட்டு…அதையும்பார்க்கப்பிடாது…தெரிஞ்சிண்டேளா…! உங்க பொண்ணுக்கு அமையாம இழுத்த மாதிரி அவனுக்கும்…!

என்ன மாமா..இப்டிச் சொல்றேள்…? முப்பதெங்கே..முப்பத்தி எட்டெங்கே…? ஒரு முப்பத்தியஞ்சுக்குள்ளன்னாக் கூடப் பரவால்லே…முத்திக் குரங்கான்னா தெரியறது? தாம்பத்யமெல்லாம் குறையில்லாமக் கழியணுமே மாமா…! நாளைக்குக் குழந்தை பிறக்கிறதுல ஏதாச்சும் பிரச்னைன்னா….?

எதிர்த்தரப்பில் அமைதி…என்னவோ முனகுவது போலிருந்தது. கடவுளே என்று வாய் முணுமுணுத்தது. ஏதும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ?  பிச்சுவுக்கு. நாக்கை அடக்கு என்றது மனசு.

எடுத்த எடுப்புல நீங்களே இப்படிப் பேசுறது நல்லாயிருக்கா? நாற்பதுலயும் அம்பது ஆரம்பத்துலயும் கூட இந்தக் காலத்துல குழந்தை பெத்துக்கிறா? அது அவா அவா இஷ்டம். வசதி வாய்ப்புகளைப் பொறுத்தது. மெடிக்கலா எவ்வளவோ முன்னேறியிருக்கிற காலமாக்கும் இது! எதுக்கும் அச்சப்படத் தேவையில்லே.  ……முப்பதுகள் வயசு ஜோடிக்குப் போய் இப்டி பயப்படுறேளே? அதெல்லாம் சேமமா நடக்குமாக்கும். நல்லதையே நினையுங்கோ…

பதற்றமாகிப் போனாள் பிச்சு. தப்பாகச் சொல்லிவிட்டோமோ? அஞ்சானா என்ன, எட்டானா என்ன? அமையறதே குதிரக் கொம்பாயிருக்கச்சே…? இதுநா வரைக்கும் ஒண்ணுகூடத் திகையலையே?

உறலோ….உறலோ…மாமா….இருக்கேளா லயன்ல…? சொல்லுங்கோ…நீங்க நல்லதத்தான் சொல்றேள்…கேட்டுக்கிறேன்…சம்மதம்தான்…

வாரிசு இல்லாமப் போயிடுமோன்னு பயப்பட வேண்டாம். அதெல்லாம் அவா பார்த்துப்பா…நன்னாவே நடக்கும்..நீங்க ஒண்ணும் கவலப்பட வேண்டாம்…தெரிஞ்சிதா…! டக்குன்னு முடிச்சு பொண்ணை வெளியேத்தப் பாருங்கோ….இதவிட சல்லிசா ஒரு வரன் அமையாது….நானாக் கண்டு பிடிச்சுக் கேட்டப்போ அவா மறுக்கவேயில்லை….உடனே சம்மதிச்சிட்டா….பையனும் பார்க்க லட்சணமாயிருக்கான்…ரெண்டு பேருக்கும் நன்னாப் பொருந்திப் போறது ஜாதகம்….நீங்க சொல்ற எட்டென்ன…பத்துமே பொருந்தறதாக்கும்…ரஜ்ஜூப் பொருத்தம் அமர்க்களம்…!

அதெப்படி மாமா…எங்கயுமே எல்லாமும் பொருந்தாதே….ஆறேழு பொருந்தறதே துர்லபமாச்சே…? -விடாமல் கொக்கி போட்டாள் பிச்சு. வாய் நின்றால்தானே?

அந்த ஆறேழுலதான் இந்த ரஜ்ஜூ வந்து உட்கார்றது…மனசு பொருந்திப் போனா எல்லாமே பொருந்திட்டமாதிரிதான் அர்த்தம். அதுக்கு முன்னாலே எந்த எந்தக் கிரக விசாரம் நிற்கும்? அதைச் சொல்ல வந்தேன்…

உங்களை மலைபோல நம்பறேன் மாமா….எனக்குப் பரிபூரண சம்மதம்….

மத்த விபரங்களை அப்புறம் அவாளோட பேசிட்டுச் சொல்றேன்.. வச்சிடட்டுமா…? தைரியமா இருங்கோ…எல்லாம் நல்லபடியா முடியும்…..உங்க பொண்ணும் நிச்சயம் சம்மதிப்பா…வேளை வந்தாச்சு….

டொக்கென்று சத்தம் கேட்டது எதிர் வரிசையில். பேச்சு முடிந்தது.

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டாள் பிச்சு. உடம்போடு உண்டான சிலிர்ப்பு. தன்னை மீறிக் கலங்கிய கண்கள்.

 ங்கே….

உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அங்கிள்….இத முடிச்சுக் கொடுத்ததுக்கு…நீங்களே பார்த்து,   பொறுப்பு எடுத்துண்டு சொன்னதுக்கு என்னோட பணிவான நமஸ்காரங்கள். அவருக்குக் கொஞ்சம் கால் ஊனம்ங்கிறதை மட்டும்  அம்மாட்ட சொல்ல வேண்டாம்…. …அது  அவ்வளவாத் தெரியாது. உன்னிப்பாக் கவனிச்சிப் பார்த்தாத்தான் புரியும்… பின்னாடி நான் சொல்லிச் சமாளிச்சிக்கிறேன்...கல்யாணம் ஆனப்புறம் என்ன…சரின்னு போய்த்தானே ஆகணும்…என் மனசுக்குப் பிடிச்சிப் போச்சு அவரை. மன ஊனம் இல்லாத நல்ல மனுஷன் . ரொம்ப வருஷப் பழக்கம் அவர். துளிக்கூடத்   தெரியாது எங்க அம்மாவுக்கு. எப்டிச் சொல்றதுன்னே சில வருஷத்தைக் கழிச்சிட்டேன்…அவரும் என்னை நம்பியே இருந்திட்டார். அந்தளவுக்கு ரெண்டு பேரும் மனசு ஒன்றிப் பழகிட்டோம்…என் கூட வேலை பார்த்தவர்தான். அப்புறம் ஃபேமிலிக்காக மாறுதல்ல போயிட்டார். ஆனா மனசு மாறவே இல்லை.இனி மீதிக் காலமும் அவரோடவே போயிடட்டும்ங்கிற  முடிவுக்கு நானும் வந்திட்டேன். நான்தானே வழிவிடணும் எங்காத்துக்கு?குத்துக்கல்லா இருக்கிறவ நான்தானே?  அதத்தானே அம்மா சொல்லிச் சொல்லிக் குத்திக் காட்டறா…!  மனசுதான் வாழ்க்கை….மனக்கோணல் இல்லாதவாளோட நிச்சயம் சந்தோஷமா வாழ்ந்திடலாம்ங்கிற நம்பிக்கை எனக்குப் பரிபூர்ணமாயிருக்கு….அது போதும்…-கண்களில் நீர் பனிக்க வைதேகி அவரை விழுந்து நமஸ்கரித்தாள்.

உனக்குப் பெரிய்ய்ய மனசும்மா….என்று நெஞ்சுருகக் கூறி  இருகரங்களாலும் மனசார ஆசீர்வதித்தார் அவர். நீ கொடுத்த அந்தப் பையனோட ஜாதகத்தை உன் தம்பி குறிச்சிருந்தானாக்கும்…அதக் குறிப்பாப் பாருங்கோன்னு நானும் சொல்லியிருந்தேன்….என்ன பண்ணினாளோ? . இப்போ உங்கம்மாட்டயே விலாவாரியாப் பேசியாச்சு….காரியமும் முடிஞ்சமாதிரிதான்…சந்தோஷம்தானே…?

சந்தோஷம்ங்கிறதைவிட திருப்திங்கிறதுதான் சரி. மனசுக்குப் பிடிச்சதுலதானே திருப்தி வரும்… நான் கிளம்பறேன் அங்கிள்…ஏண்டீ  லேட்டுன்னு அம்மா துளைச்செடுப்பா….யாரோட ஊர் சுத்திட்டு வர்றேன்னு கூட ஒரு நாள் கேட்டிருக்கா…!  அப்பா இல்லாத குறைக்கு இப்படிப் பல வசவுகள்…எல்லாம் மரத்துப் போச்சு அங்கிள்….

அடுத்தாப்ல தம்பதி சமேதரா  நீங்க ரெண்டு பேரும்தான் ஒத்துமையா இருந்து உன்னோட தங்கைமார்கள் ரெண்டு பேத்தையும் படிப்படியாக் கரையேத்தணுமாக்கும்….அந்தப் பொறுப்புமே இனிமே உனக்கும் அவருக்கும்தான். அப்புறம்தான் உனக்கு  மொத்தமா விடியும்… ஞாபகம் வச்சிக்கோ…

கண்டிப்பா அங்கிள்…என் கடமையை நான் மறக்கவே மாட்டேன். பொறுப்பா எனக்கு உதவுறதுக்கு ஒரு தம்பியையும் வச்சிருக்கேனே…!  மலைபோல அவன் எனக்கு இருக்கான்! தங்கக் கம்பி…!!-என் மேலே ரொம்ப அக்கறை உண்மையிலேயே அவனுக்குத்தான்னு சொல்லணும்…!! பொருள் பொதிந்த ஒரு புன்னகையை அவரைப் பார்த்து உதிர்த்துவிட்டு விடைபெற்றுக் கொண்டாள் வைதேகி.

ரயில் நிலையம் அருகே அமைந்த அந்தத் திறந்த வெளிக் காலனி வழியே நுழைந்து அவள் நடந்து வந்து கொண்டிருந்த போது விரிந்து கிடந்த  தண்டவாளங்கள் தொலைதூரத்தில் ஒன்றுகூடி நீண்டிருப்பதைக் கண்ணுற்றாள்.    

 ------------------------------

 

 

 

 

 

 

விவேகம்   -   சிறுகதை - பிரசுரம் - உயிர் எழுத்து ஏப்ரல் 2024





                                                தையெல்லாம் சொல்ல வேண்டாம் என்று மனதில் போட்டு அமுக்கிக் கொண்டிருந்தாரோ அவைகளைத் தன்னை மீறிச் சொல்லி விடுவோமோ என்று பயந்தார் கனகவேல். கண்களால் காண்பவற்றிலெல்லாம் குறைகள்தான் தென்படுகின்றன. ஏனப்படி? தன் பார்வையே தவறோ?. நூல் பிடித்தாற்போல் இருந்து காலம் கடந்து வந்து விட்டவருக்கு இன்று அவர் கண் முன்னே நடப்பவையெல்லாம் தப்பாகவே தெரிகின்றன. மாற்றிக் கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என்றும் எதிர்பார்க்கிறது மனம். ஏக்கப் பெருமூச்சைக் கிளர்த்துகின்றது சிந்தனைகள். கூடியானவரை அமைதி காக்கிறார். அதுதான் அவரது ஆயுதம்.

                                                கம்முன்னு இருந்தே கொல்றாரே…! என்றும் நினைத்து விடக் கூடாதே…அதற்காக அவ்வப்போது ரெண்டொரு வார்த்தைகள் பேசிக் கொள்கிறார். சுமுகமாய்த்தான் இருக்கிறேன் என்று  தெரிய வேண்டுமே!

                                                மனதில் தோன்றுவதையெல்லாம் பேசி விட முடியுமா? மாற்றிக் கொள்வதற்கு மனப் பக்குவம் தேவை. அதை இளையவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. நரை கூடிக் கிழப் பருவம் எய்தும் நிலையில்தான் நமக்கே ஓரளவு பக்குவம் ஏற்படுகிறது. அதுவும் சீரான நிலையில் நிற்பதில்லை. அடிக்கடி தடுமாற்றம் காண்கிறது. சுற்றிலும் பிடிக்காத விஷயங்கள் நிறைய நடக்கின்றன. தலைமுறை இடைவெளி. அப்படித்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொள்கிறார்.

                                                  இடத்தை விட்டு அகன்று விடுவதுதான். ஓரளவு மனப்பக்குவத்தைப் பராமரிப்பது என்பது அதில்தான் சாத்தியமாயிற்று.  அதற்காகத்தான் அகலுகிறோம் என்று யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதையுணர்வும் இருந்தது. யதார்த்தமாய் விலகுவது போல் விலகி மறைந்து நின்று விட வேண்டும். கண்ணால் கண்டால்தானே தப்பும் தவறும் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது? நம்மால் எதற்குப் பிரச்னை? மௌனம் எவ்வளவு வசதியானது? அது கேடானதும் கூட.

                        எதையுமே அப்பா கண்டுக்கிறதில்லை. எதுக்குமே  பதில் சொல்றதுமில்லை….!-இதுவும் அவராகவே  நினைத்துக் கொண்டதுதான். யாரும் சொன்னதில்லை. மன ஓட்டங்களே மனத் தடைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. அதுவும் ஒரு நன்மைதான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் மனப்பான்மையிலிருந்து தப்பிக்கலாமே!

                                                சண்டை, சச்சரவு இல்லாமல் இருந்தால் சரி. தான் ஏதேனும் சொல்லி வைக்கப் போக, அது குத்தமாய்ப்பட, அதற்கு சுரீர் என்று பதில் வர, அதனால், தான் டென்ஷனாக, எதற்கு இதெல்லாம்? தேவையா? நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போன இந்த வயதில் கமுக்கமாய் உட்கார்ந்திருப்பதுதானே சுகம்? தன் அமைதி வீட்டின் அமைதி. சண்டைக்காரன் தான் மட்டுமே…! எதற்கு அப்படிப் பெயர் வாங்க வேண்டும்?

                                            நான் சொல்றதச் சொல்லிட்டேன்…அப்புறம் உங்க இஷ்டம்…என்று வெட்டிக்கு வார்த்தைகளை உதிர்க்க இவர் மனம் இடம் தரவில்லை. எத்தனை முறைதான் இதைச் சொல்வது? நல்லதைச் சொன்னால் எடுத்துக் கொள்ளணும். ஓ.கே..அப்பா சொல்றதுதான் சரி…அப்டியே செய்திடுவோம்….என்று பின்பற்ற வேண்டும். நல்லவைகளாய் நியமங்கள் படிந்தால்தான் வாழ்க்கை ஒழுங்கு முறையாய்ப் பயணமாகும். ஏனோ தானோவென்றிருந்தால்  எதிலும் ஒரு திருப்தியோ, நிறைவோ இருக்காது.

                                                சும்மாவானும் தான் பேசப் போக, பிறகு ஏண்டா இதைச் சொன்னோம் என்று வருந்தணும். சொன்னபடி செய்யாவிட்டால் அது கௌரவக் குறைச்சலாயும் தோன்றும் வாய்ப்புண்டு. ஸாரிப்பா….இப்டித்தான் செய்ய முடிஞ்சிது…தப்பா எடுத்துக்காதே…என்று ஒரு சமாதான வார்த்தைகள் கூடச் சொல்ல மாட்டார்கள். நீ சொல்றதச் சொல்லிட்டே கிட…நாங்க செய்றதச் செய்திட்டே இருக்கோம்…

                                                வயசான இந்தக் கெழத்துக்கு இதுவேற சொல்லணுமா? என்று நினைப்பார்களோ? என்ன ஸாரி வேண்டிக்கிடக்கு? தான் சொன்னது நடக்கலேன்னா…பார்த்திட்டுப் பேசாம  கம்முனு இருக்க வேண்டிதான…ஒவ்வொண்ணுக்கும் இவர்ட்ட ஆலோசனை கேட்டுட்டு நிற்க முடியுமா? அல்லது ஒவ்வொண்ணையும் இவர் சொல்ற பிரகாரமே செய்திட்டுதான் இருக்க முடியுமா? அப்போ நமக்குன்னு விருப்பமே கிடையாதா? அவுங்க காலம் அவுங்க விருப்பம். அதுபோல இப்போ இது நம்ம காலம் நம்ம விருப்பம்… …!

                                                சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சொல்லக் கேட்டு வேறு கேவலப்பட வேண்டுமா? அதற்கு முன்னால் நாமளே புரிந்து கொண்டு ஒதுங்கிக் கிடப்பதுதானே நன்று?   அனுபவம் என்பதன் விலைதான் என்ன? முதிர்ச்சி என்பதன் அடையாளம்தான் என்ன?

                                                இப்படியெல்லாம் தோன்றித் தோன்றித்தான் படிப்படியாக ஒவ்வொன்றிலிருந்தும் மெல்ல விலகி தனியனாகி விட்டார் கனகவேல்.

                                                பசங்களுக்கு ஏற்றாற்போல் தனக்குப் பேசத் தெரியவில்லை. அல்லது அவர்கள் பேசுவது  பிடிக்கவில்லை. ஏற்றாற்போல் பேசுவது என்பது அசடு வழிவது! அவர்கள் எது செய்தாலும் அது சரி என்று சொல்வது. அப்படியிருப்பது சரியா?  நல் வழி காட்டத்தானே நாம் இருக்கிறோம்? எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்றா  விட முடியும்? நினைத்துப் பார்ப்பதோடு சரி.

                                                எதுவும் சொல்லி எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்பதுதான் கிடைத்த விடை. யாரையும் யார் சொல்லியும் திருத்த முடியாது. அவரவர் அனுபவப்பட்டுத் திருந்தினால்தான் உண்டு என்பதே நிதர்சனம்.

                                                வீடு தன் பிடிக்குள் இல்லை என்று எப்போதோ தோன்றிவிட்டது. கண்களை மூடிக் கொண்டார். காதுகளைப் பொத்திக் கொண்டார். வாய்க்கும் பூட்டுப் போட்டார். எத்தனை வீடுகளில் என்னைப் போல் இருப்பார்கள் என்றும் பெருமையாய் நினைத்துக் கொண்டார்.

                                                ந்த தீபாவளிக்குப் புதுசுன்னு ஒண்ணு இருக்கட்டும்ப்பா…வேண்டாம்ங்காதே… ! வற்புறுத்தினான் சிவா.

                                                பசங்களுக்கு காசு செலவழிப்பதில்  தயக்கம் கிடையாது. ஆத்தோட போற தண்ணி…அய்யா குடி…அம்மா குடி…! எவனோ அள்ளித் தருகிறான். இவர்களும் அள்ளி விடுகிறார்கள். வந்தது தெரியும், போவது எங்கே…வாசல் நமக்கே தெரியாது…. என்ற வரிகள் இவர்களின் வரவு செலவுக்கு சாலப் பொருத்தம்.

                                                அதற்காக அள்ள அள்ளக் குறையாமல் போய் விடுமா? ஜாக்கிரதையுணர்வு வேண்டாமா?  பென்ஷனும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது…இப்பவே சேமித்து வைத்துக் கொண்டால்தான் ஆச்சு. மாசா மாசம் இவ்வளவாவது சேமித்து விடுவது என்று எவனாவது யோசிக்கிறானா? வெறுமே வங்கி நடப்புக் கணக்கில் வைத்திருந்து என்ன பயன்? அதில் ஒரு தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டால்தானே வட்டி, கூடக் கிடைக்கும். அது எடுக்க முடியாமல் கொஞ்ச காலத்திற்கு சேமிப்பாய் நிற்கும்?

                                                சேரச் சேரத்தாண்டா மனசுக்கு ஆசை வரும். நீ சேர்த்துப் பாரு…அப்பத் தெரியும் அதன் வளர்ச்சி…என்று எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தார். சொன்னதற்குப் பஞ்சமில்லாமல் ஏதோ கொஞ்சம் போட்டான். பிறகு அதுவும் நின்று விட்டது. தார்க்குச்சி போட்டு இவர்களைக் குத்திக் கொண்டேயிருக்க வேண்டும். சண்டி மாடுகள். அப்பொழுதுதான் உருப்படுவார்கள்.  இளைய தலைமுறை இன்று அப்படித்தானே இருக்கிறது? செலவழிப்பதில் இருக்கும் இன்பம், இவர்களுக்கு ஏன் சேமிப்பில் வரமாட்டேனென்கிறது?

                                                அந்தக் காலத்தில் சீட்டுப் பிடிக்கிறேன் என்று பஸ்-ஸ்டான்டில் அலையும் அப்பணசாமியை நினைவுக்கு வந்தது இவருக்கு. சின்னச் சின்னக் கட்டம் போட்ட  தேதிவாரியான அட்டையில், அப்பப்போ  கொடுக்கும் பைசாவைக் கூட்டிக் கூட்டிப் பதிவு செய்வான் அவன். அவசரத்துக்கு சினிமா போகவென்றெல்லாம் அவனிடம் நாலணாக் காசு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் சந்திரா டாக்கீஸில்  படம் பார்த்ததும் உண்டு. அப்பொழுதே நாலணா…நாலணாவாய்ச் சேர்த்து மொத்தக் கட்டமும் நிறைந்தவுடன் எதோ கொஞ்சம் பைசா கூடச் சேர்த்து அவன் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்ததும்…எந்தங்கம்…கொள்ளச் சமத்து, கோட்டச் சமத்து…என்று அம்மா ஆரத் தழுவி முத்தா கொடுத்ததும்…!!

                                                . அந்தப் பழக்கம்லாம் சுட்டுப் போட்டாலும் இவனுங்களுக்கு வராது.  ஒரு உண்டியல் வாங்கி  சாமி முன்னாடி வைடா என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டார். இன்னும் வாங்கி வைக்கிறான்…! மண் உண்டியல்லாம் வாங்க முடியாதுப்பா…இந்தக் கோயில் வாசல்ல வச்சு விப்பானே…அதத்தானே சொல்ற…ஊகும்…..

                                                போட்டா எடுக்க முடியாததுதான் உண்டியல். நிரம்பி வழிஞ்சதும், அதை உடைச்சுத்தான் பணத்த எடுக்கணும். மண் உண்டியலோட பெருமையே அதுதான். அந்தக் காசை ஏதாச்சும் கோயில் குளம் போகப் பயன்படுத்தணும். மீதியைக் கோயில்ல சேர்க்கணும்…அப்புறம் புதுசு ஒண்ணு வாங்கிப் போடணும். இதெல்லாம்  பெரியவங்க நம்ம கிட்டே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தின எளிய வழிமுறை. வசதியில்லாதவங்க வேறே எப்படிச் செய்றது?வாழ்க்கையைப் புதுப்பிச்சிக்கிற வழிமுறைகள்.  நல்ல பழக்கங்கள் படிய சொல்லிக் கொடுத்த நடைமுறைகள்.   இப்ப நீங்க எங்க செய்யப் போறீங்க? என்றார் ஒரு நாள்.

                                                அது உண்டியல் என்கிற பெயரில் பூட்டுத் தொங்கும் ஒரு டப்பா வாங்கி வந்திருந்தான். மேல் மூடியில் ஒரு நீள் ஓட்டை. அது வழியாகக் காசு போட வேண்டுமாம். ரூபா நோட்டையும் மடிச்சுத் திணிக்கலாம்ப்பா…என்றான். உண்டியலுக்குப் பூட்டா? சாவி யார்ட்ட இருக்கும்?. சாமி படத்துப் பின்னால வச்சிடுவோம் என்றான். சரி வையி…அப்பப்போ பால் பாக்கெட், காய் வாங்கன்னு  பற்றாக்குறைக்குப் பயன்படட்டும். அவசரத்துக்கு உதவும்ல? என்னப்பா இப்படிச் சொல்றே? என்றான் சிவா. இந்த உண்டியலோட பெருமை அதுதான்…அவ்வளவுதான்…

                                                எது குடிக்க முடியாதோ அதுதான் சூடு. அதுபோல எது திறக்க முடியாதோ அதுதான் உண்டியல். சிறு சேமிப்புங்கிறது அந்த வழிமுறைலதான் இருக்கணும்…. நம்ம நடைமுறைக்கும் இவங்களுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?

                                                னக்கு எதுக்குப்பா அநாவசியத்துக்குப் புதுச்சட்டை? முன்னால் மேசையில் வைக்கப்பட்டிருந்த அதையே பார்த்துக் கொண்டிருந்தார். தொடவே பயமாய் இருந்தது.

                                                அதான் இன்னும் பார்சலே பிரிக்காத புத்தம் புது எட்டு முழ வேட்டி இருக்கு….வேண்டாம்…வேண்டாம்னு சொல்லியும் கேட்காம ஒரு குர்தா வேறே எடுத்துக் கொடுத்துட்டே….அதைப் போடணும்னு வச்சிருந்தே ஒரு வருஷம் ஓடிப் போச்சு…அது ரெண்டையும் இந்தத் தீபாவளிக்குப் போட்டுக்கிறேன்…போதாதா?  அதுக்குமேலே என்ன வேணும்.  நீங்க சின்னப் பிள்ளைக…போட வேண்டிதான் வித விதமா…!

                                                இந்த தீபாவளிக்கு நீங்க இதைப் போடுறீங்க… என்றான் சிவா. அன்புக் கட்டளை.

            புதுசு போடணும்ங்கிற ஆசையெல்லாம் என்னைக்குமே இருந்ததில்லப்பா…எத்தனையோ தீபாவளி அப்படிக் கழிஞ்சிருக்கு. ஆசைப்படவே தெரியாது. இருந்தாத்தானே  ஆசைப் படுறதுக்கு? வறுமைலயும், பட்டினிலயும், அவமானத்துலயும் கூனிக் குறுகி வாழ்ந்த, வளர்ந்த வாழ்க்கை….இப்ப நீங்கள்லாம் நல்லாயிருக்கீங்களே…அதுதான் சந்தோஷம்….

                                                இப்ப அப்படித்தான் சொல்லுவே…அப்புறம் குர்தா போடக் கூச்சமா இருக்குன்னு வச்சிடுவே….அதை ஷார்ட் குர்தாவா உயரம் சுருக்கித் தைச்சுத் தர்றேன்னு சொன்னேன். அதையும் வேணாம்னுட்டே…அதுக்காகத்தான் ஒரு புது ஷர்ட் எடுத்துக்கோன்னு சொல்றேன்….-விடாமல் பிடித்த பிடியாய் நின்ற மகனின் வற்புறுத்தலில் தளர்ந்துதான் போனார் கனகவேல்.

                        நாற்பதா இல்ல நாற்பத்திரண்டா….அளவு? என்று கேட்டுக் கொண்டிருந்தவன் ஒரு உத்தேசத்தில் நாற்பத்தியிரண்டு என்ற அளவினில் ஒரு சட்டையை அவனே வாங்கிக் கொண்டு வந்து நீட்டியபோது மகிழ்ச்சியும் கொஞ்சம் கோபமும் சேர்ந்தே வந்தது இவருக்கு.  அளவு என்னவோ கரெக்டாகத்தான் இருந்தது. விலையைச் சொன்னபோதுதான் பகீரென்றது. உடம்பு ஆடிப் போனது.

                                                என்னது, ரெண்டாயிரமா? இதென்னடா அநியாயமா இருக்கு? அப்படி என்னடா இருக்கு இந்தச் சட்டைல….? என்று கத்தினார். இவ்வளவு விலை கொடுத்தா வாங்குவாங்க…? காசென்ன மரத்துலயா காய்க்குது?

                                                ஏம்ப்பா இதுக்குப் போய்க் கத்துறீங்க? பிரான்டட்ப்பா…காலர்ல என்ன போட்டிருக்கு பாருங்க….? ஃபேமஸ் கம்பெனியாக்கும்…அவன்ட்ட எப்பவுமே விலை ஜாஸ்திதான். ஆனா சரக்கு நல்லாயிருக்கும்….ஸ்டான்டர்டா….! அங்க நிக்கிற கூட்டத்தப் பார்த்தேன்னா நீ இப்படிச் சொல்ல மாட்டே…! அவ்வளவு டிமான்ட்….!

                                                அப்போ விலை ஜாஸ்தின்னு தெரிஞ்சிதான் எடுத்திருக்கே… இல்லியா? இதுல நமக்கென்ன பெருமை? வெளில வந்து இப்படிச் சொல்லிக்கிறதுதானா?  வெட்டிப் பெருமை…! இவ்வளவு  காசு போட்டு எனக்கெதுக்குப்பா இந்த ஷர்ட்டு? சாதாரணமா ஐநூறு, அறுநூறுன்னு இருந்தாப் போறாதா? அதுவே என்னைப் பொறுத்தவரை அதிகம்தான்.

                                                ஐந்நூறுக்கு எடுத்து வந்தாலும் அதுவும் விலை ஜாஸ்தின்னுதான் சொல்வீங்க…நீங்க…!

                                                அந்தக் காலத்துல நாங்கள்லாம் இருநூறு முன்னூறுக்கு எடுத்த துணிகள்தான் இன்னைக்கு இந்த விலை விக்குது! என்ன பெரிய க்வாலிட்டி மாறியிருக்கு? அதே துணிதான்…. ஆறு மாசத்துல ஃபேடு ஆயிடுச்சின்னு ஈஸியாத் தூக்கிப் போட்டுடுறீங்க…நாலு ரூபா, அஞ்சு ரூபான்னு பாத்திரக்காரன் எடுத்துக்கிறான். வயித்தெறிச்சலா இருக்கு…! ஒரே சட்டையை அஞ்சாறு வருஷம் கிழியாம வச்சிருப்போம் நாங்கள்லாம்…லேசுல தூக்கியெறிய மாட்டோம். மனசாகாது. எங்கயாச்சும் லேசாக் கிழிஞ்சாலும், போய் தெச்சுட்டு வந்திடுவோம்.

                                                 இப்பத்தான் கிழிசல் தைக்கிற ஜோலியே இல்லியே..! அப்டி அப்டியே பழசு…பழசுன்னு ஒதுக்கித் தூக்கியெறிஞ்சிடுறீங்களே…கிழிசல் தைக்கிற தையக்காரன் எவன் இப்ப கண்ணுல படுறான். அங்கங்க கடை வாசல்ல அப்பல்லாம் உட்கார்ந்திருப்பாங்க…ரெடி ரெடியாத் தெச்சுக் குடுப்பாங்க…கொடுக்கிறத வாங்கிக்கிடுவாங்க…தெருத் தெருவா தையல் மிஷினைத் தோள்ல தூக்கிட்டு அலைவான்…அவுங்களையெல்லாம் இந்த சமுதாயம் எப்பவோ தூக்கியெறிஞ்சிடுச்சு. இதெவல்லாம் ஒரு பொழப்பான்னு உதறிட்டாங்க…சின்ன வேலையானாலும் அதையும் பொருட்படுத்தி செய்றதுக்கு ஆள் இருந்தது அப்போ….! இப்போ? எதையுமே பொருட்படுத்தாத வாழ்க்கை வாழ்றீங்க…யூஸ் அன்ட் த்ரோ…ன்னு ஒரு கலாச்சாரம். திருமண வாழ்க்கைலயும் இந்தக் கலாச்சாரம். புகுந்துட்டதா நீதி மன்றங்கள் வேதனைப்படுது.. நுகர்வுக் கலாச்சாரம். ஒரு பொருளைப் பயன்படுத்தின பிறகு தூக்கி எறியுறது!  இப்டியேதான் வயசான எங்களையும் நாளைக்கு நீங்க தூக்கி எறிஞ்சிடுவீங்க போல்ருக்கு?

                                                அவரின் நீண்ட பேச்சில் இந்தக் கடைசி வாக்கியம்தான் கனகவேலின் பஞ்ச். ஒரு “க்“ வைத்துதான் எந்தப் பேச்சையும் முடிப்பார். அதனால் மற்றவர்கள் மனசு சங்கடப்படுமே என்று நினைக்க மாட்டார். எழுபது வயசு எட்டப் போற எனக்கு இது கூடச் சொல்ல உரிமையில்லையா? இந்தச் சுதந்திரம் கூடக் கிடையாதா?  என்று நினைத்துக் கொள்வார். சமயங்களில் தன் அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது? அமுக்கியேவா வைப்பது என்று வெடித்து விடும்.

                                                வயசான ஆளு…அவர் அப்படித்தான்…இல்ல…அது அப்டித்தான்னு நினைச்சிட்டுப் போங்களேன்…என்று சற்று கர்வமாகவும் நினைத்துக் கொள்வார். வேகம் விவேகமாக மாறிவிட்டது இப்போது….!

                                                துக்கு இப்படி ரூம்லயே அடைஞ்சு கிடக்குறீங்க? உறால்ல வந்து உட்காருங்க…என்றாள் வேதவல்லி. மனசோடுதான் இதைச் சொல்கிறாளா என்றிருந்தது இவருக்கு. அவரால் வீட்டில் பப்ளிக்காக உட்கார முடியவில்லை. கலகலவென்று பேசினாலும் அதிகபட்சம் அஞ்சு நிமிஷத்திற்கு மேல் தாங்காது. அதிகம் சிரித்து விட்டால் கூட ரொம்ப சந்தோஷப்பட்டுட்டமோ? என்று மனசுக்குத் தோன்றும். இளம் பருவ வாழ்க்கை முழுவதுமாக சோகமாகவே கழிந்து விட்டதால் அதுவே நிலைத்துப் போனது.   பிடித்த ரசம்  சோக ரசம்தான்.

                                                அங்கு போய் உட்கார்ந்தால் பலதும் கண்ணில் படும். எதாவது சொல்ல வேண்டி வரும். சகஜமாய்ப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஏதாச்சும் சொல்லப் போக அதுவே தப்பாகப் பட்டுவிட்டால்? தப்பாகத்தானே படுகிறது. சகஜமாக எடுத்துக் கொள்ள இளசுகளுக்குத் தெரியவில்லையே? முற்போக்கான சிந்தனையாம்! எதையும் கேள்வி கேட்கும் தன்மையாம்!  வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை. எந்த அனுபவமுமே இல்லாதவர்கள் கேள்வி கேட்பது என்ன லட்சணம்? அது கத்துக்குட்டித்தனமில்லையா? திண்டுக்கும் முண்டுக்கும் பேசுவது எப்படி புத்திசாலித்தனமாகும்? பேசுவதையெல்லாம் தப்பாகவே எடுத்துக்கொண்டு அதையே க்ளெவர்னெஸ் என்று அசட்டுத்தனமாய்ப் பெருமைப்பட்டுக் கொள்வது? என்ன கலாச்சாரமோ? கன்றாவியோ?

                                                விரித்த படுக்கைகளையே இவர்கள் மடக்குவதில்லை. மெத்தை என்றாலும் அழுந்தச் சுருட்டி வைத்தால் ஆகாதா? இதென்ன லாட்ஜா அல்லது வீடா? போட்டது போட்டமேனிக்குக் கிடக்க? அறையைக் கூட்டுவது என்பதே கிடையாது. பார்பர் ஷாப் மாதிரி மூலையெல்லாம் அடை அடையாய் தூசி, முடிக் கற்றைகள்…! அங்கு கூட இப்பல்லாம் சுத்தமாய்த்தான் வைத்துக் கொள்கிறார்கள். வீடுகள்தான் சீரழிகின்றன. விழுத்துப் போட்ட துணி குப்பலா மூலைல கெடக்கு. அங்கங்க தலை முடி கொத்துக் கொத்தாப் பறக்குது. பார்த்திட்டே தாண்டிப் போறாங்க.. அதை முடிஞ்சு குப்பைக் கூடைல வீசணும்ங்கிற சின்ன அறிவு கூட இல்ல. சொல்லிக் கொடுத்திருந்தாத்தானே வரும். உள்ளாடைகளெல்லாம் மறைவா உலர்த்தணும். காய்ஞ்சவுடனே மடிச்சு பீரோக்குள்ள தள்ளணும்னு கிடையாதா?  எதைச் சொல்றது, எதை விடுறது? எல்லாமே தப்பா இருக்கே? சகிக்க முடியாத அளவுக்கு? குளிக்காம காலை டிபன் சாப்பிடறது..மதியம் சோத்த அமுக்குறது…சாவகாசமா நாலு மணிக்கு மேலே போனாப் போகுதுன்னு ரெண்டு சொம்புத் தண்ணிய உடம்புல விட்டுக்குறது….இதெல்லாம் வியாதிக்கு வழி வகுக்காம என்ன செய்யும்? எதுக்கு நியமங்கள்னு வச்சிருக்காங்க…எல்லாம் என் இஷ்டம்தான்னு இருந்தா?

                                                எல்லாமே வெட்ட வெளிச்சமா இருக்கு. டிரெஸ் கோடும் மாறிப் போச்சு பெண்டுகளுக்கு. வீட்டுல இருக்கைல என்ன மாதிரி டிரஸ் போடணும், வெளில போகைல எந்த மாதிரி உடுத்தணும்னு யார்தான் கட்டுப்பாடா நினைக்கிறாங்க இன்னைக்கு…அப்புறம் அவன் தட்டினான், தடவினான்னா? எல்லாக் கண்றாவியும் வரத்தான செய்யும்! எத்தன பேர் கையை ஒடிக்கிறது? எத்தனை பேரப் போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்கிறது? தினம் ஈவ் டீஸிங் கேசப் பார்க்கவே நேரம் சரியாப் போகுதுன்னு புலம்புது போலீஸ். சமுதாயம் அந்தளவுக்குக் கெட்டுக் கிடக்கு. .ஊரே தத்தாரியாத்  திரியும்போது வீட்டுக்குள்ள மட்டும் எப்டி ஒளிவு மறைவு வரும்? காத்தாட இருக்காங்க போல்ருக்கு…! இன்னும் என்னெல்லாம் கண்றாவியக் காணனுமோ? இந்தக் கண்கள் செய்த பாக்கியம்…!

                                                இப்படிக் கண் பார்க்கும் பலதிலும் ஏதாவது சொல்லத் தோன்றும். கிண்டல் அங்கங்கே தெறிக்கத்தான் செய்யும். தாறுமாறாய்  வெடிக்கும். அதனால் அறையில் ஒதுங்கியே கிடந்தார்.  சுவற்றைப் பார்த்துத்தான் அமர்ந்திருப்பார். மற்றவர்களுக்கு  முதுகுதான் தெரியும். சீரியஸாய்ப் படித்துக் கொண்டிருக்கும்போது முகம் மாறுபடும். உணர்ச்சிகள் மாறுபடும். அவை இவரது பாவங்கள்…!

                                                உங்கப்பா என்ன எப்பப் பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வச்சிட்டிருக்காரு? என்று மருமகள் மாலா கேட்டால்? கேட்டாலென்ன ஒரு நாள் கேட்டுத்தான் விட்டது.

                                                அவர் முகம் எப்படியிருந்தா உனக்கென்ன? உன்ன ஏதாச்சும் சொன்னாரா? அவர்பாட்டுக்குத்தான இருக்காரு? விடு…என்று அடக்கி விட்டான் சிவா. அவனின் அந்த பதில் இவருக்குத் திருப்தி தந்தது.

                                                சும்மா சிவனே என்று இருந்ததற்கே இப்படியென்றால் உறாலில் போய் உட்கார்ந்து கொண்டு ஏதேனும் வாயைக் கொடுக்க…அது விபரீதம் ஆகி விட்டால்?  வெளியேதான் வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இப்பொழுதெல்லாம்தான் வீட்டிலேயே அது நடக்கிறதே?

                                                என்னை எதுக்கு உறாலுக்கு வரச்சொல்றே? எனக்குத் தனிமை வேணும், அமைதி வேணும்…நான் இங்கயே இருக்கேன்…என்றார் இவர்.

                                                நீங்க உறாலுக்கு வந்து அடிக்கடி உட்கார்ந்து சகஜமா அவுங்க கூடப் பேசினாத்தான் வீட்டுல ஒரு சுமுகம் இருக்கும்…அதுக்காகச் சொன்னேன். என்றாள் வேதவல்லி. என்னவோ கண்டுபிடித்துச் சொன்ன மாதிரியிருந்தது அவள் பேசியது. என்னால்தான் சகஜ நிலை கெடுகிறதா? இவ ரொம்பக் கலகலப்பா? இல்ல அந்தப் பொண்ணுதான் சிரிச்ச முகமா? எல்லாந்தான் ஏதோ கல்லைத் தலைல சுமந்திட்டிருக்கிறமாதிரி…அலையுது?

                                                என்னவோ நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கின மாதிரி….தங்கத் தேர்லயா அவங்கப்பன் கொண்டு வந்து விட்டான்? இல்ல பேரழகியா கர்வப்படுறதுக்கு?? பெரிய திறமைசாலியா ஐ.டி.ஃபீல்டுல? நூறோட நூத்தி ஒண்ணு…அவ்வளவுதானே?சாதாரண நடுத்தரக் குடும்பம்தானே? அதுபோல சாதாரணமா இருந்திட்டுப் போக வேண்டிதானே? ஐ.டி.ல வேலை பார்த்தாலே அறிவாளின்னு நினைச்சுக்குவாங்க போல்ருக்கு? சம்பளத்த அள்ளிக் கொடுக்கிறான்ல…அந்த நெனப்பு வரத்தான செய்யும்? எல்லாம் காசு பண்ற வேல….என்னால தனிச்சு இயங்க முடியும்ங்கிற திமிரு. இருந்து பார்த்தாத் தெரியும் குடும்பமா இருக்கிறதோட அருமை!  அதனாலதான டைவர்ஸ் கேசுக தினமும் வரிச கட்டுது கோர்ட் வாசல்ல…? பெத்தவங்க குத்தமா…இல்ல வளர்த்தவங்க குத்தமா?  தலைய விரிச்சிப் போட்டுட்டு அலையுற கலாச்சாரம் எப்ப வந்திச்சோ…அன்னைக்கே எல்லாமும் கெட்டுப் போச்சுன்னுதான் சொல்லணும்….அந்தப் பொண்ணுதானே இந்த வீட்டுக்கு வந்தது. அதுதான் சகஜமா இருக்கணும். தன்னை மாத்திக்கணும்…இந்த வீட்டுக்குத் தகுந்தாப்ல….எனக்கொண்ணும் அவசியமில்ல…!! நான் இருக்கிறபடிதான் இருப்பேன்…!

                                                நீ சொல்றதெல்லாம் அந்தக் காலம்டீ…..! இப்போ தனித் தனியா இருக்கிறதுதான் ஃபேஷன்…நீ அடுப்படில…நான் இங்க…உறால்ல அவங்க ரெண்டு பேரும் தனிமையாப் பேசிக்கிறதை நாம ஏன் அநாவசியமாக் கெடுக்கணும்? அவங்க பிரைவசியைக் கெடுத்த மாதிரி ஆகி, அப்புறம் அதுக்கு ஒரு சண்டையா? போய் உன் சோலியப் பாரு…என்றார் இவர்.

                                                விவஸ்தையில்லாமல் அவள்தான் உறாலில் அமர்ந்து கொள்கிறாள்.

                                                வேலைய முடிச்சியா…பேசாம என் ரூமுக்கு வந்து கிட….பேப்பர் படி…ஸ்லோகம் சொல்லு….அநாவசியமா உறால்ல போய் ஏன் உட்கார்றே? என்றால் கேட்டால்தானே? நான்பாட்டுக்கு உட்கார்ந்திருக்கேன்…என் இஷ்டம்….என்கிறாள் கேட்டால். காலத்துக்கு ஏத்த மாதிரி இஷ்டங்களும் மாறும்ங்கிறது அவளுக்கு ஏன் தெரில?

                                                உறாலுக்கு எதிர் ரூமில் மருமகள் மாலா அமர்ந்து கொண்டு கணினியை நோண்டிக் கொண்டிருக்கிறது. அல்லது காதில் இயர்ஃபோனைச் செருகிக் கொண்டு கிளையன்ட்டுடன் பேசிக் கொண்டிருக்கிறது. Work from home…இவள் எதற்கு உறாலில் அந்தப் பெண்ணின் வேலையை, செயலை, இயக்கத்தை நோட்டம் இடுவது போல் போய் குத்துக்கல்லாட்டம் அமர வேண்டும்? இந்த இங்கிதம் வேண்டாமா அவளுக்கு?

                                                அது மறைவாய் ஒதுங்கி ஒதுங்கி சுவற்றோடு பல்லியாய் ஒட்ட, அதுவும் பலிக்காமல் அறைக் கதவைச் சாத்த….மூஞ்சில அடிச்சாற்போல….இது தேவையா?

                                                சாத்தினாச் சாத்திக்கட்டும்…எனக்கென்ன வந்தது? என்கிறாள் இவள். நீங்க நினைக்கிறீங்க…அது ஆபீஸ் வேலை பார்க்கிறதுன்னு…சினிமாவாக்கும் பார்த்திண்டிருக்கு…மொபைல்ல! அதுக்கு ஆபீசா…லீவான்னு யார் கண்டது? அவன்கிட்டயே அது சொல்றதில்லை…தெண்டம்…தெண்டம்….ஒரு துரும்ப நகர்த்தாது….உட்கார்ந்திருந்தே துருப்பிடிக்கப் போகுது….ஏதாச்சும் ஒரு சின்ன வேலை செய்தாக் கூட அப்பாடீ…அம்மாடீ…ன்னு மூச்சு வாங்குறதப் பார்த்தீங்கல்ல? கையையும் காலையும் அசைக்கிறதுக்கே காசு கேட்கும் போல்ருக்கு…!  இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்படியா வளர்க்கிறது? வெட்கப்படணும் அவுங்க…! பெத்த வயித்துல பெரண்டையைத்தான் வச்சிக் கட்டிக்கணும்…! .எனக்கென்ன வந்தது? நான் என் பையனுக்காக என் பையன் கூட இருக்கேன்…அவனுக்குப் பிடிச்சதை சமைச்சுப் போட்டு திருப்திப் பட்டுக்கிறேன்…அதுலதான் எனக்கு  நிறைவு….அவன் நான் வேண்டாம்னு சொல்லட்டும். விட்டுடறேன் – கேட்டது கேட்காதது என்று எல்லாவற்றையம் சொல்லிப் புலம்பிக் கொண்டாள் வேதவல்லி.

                                                நல்லவேளை….என்னிடம்தான் புலம்புகிறாள் தனியாய். கொஞ்சம் சத்தத்தையும் குறைத்துக் கொள்கிறாளே,,,! பயம்தானே காரணம்? பயமா அல்லது எதுக்கு அநாவசியச் சண்டை என்கிற எண்ணமா? என்னிடம் புலம்பியவைகளை அவள் பையனிடம் சொல்ல வேண்டியதுதானே? அதுக்கு வாய் வராது. அவன் என்ன சொல்வானோ…யார் கண்டது? பிறகு பையனும் கையை விட்டுப் போய்விட்டால்? பெண்டாட்டிக்கு மசியாத பயல்கள்தான் யார்?

                                                பாவம் வேதவல்லி. என்னோடு வயசான காலத்தில் தனியாய் வந்து நிம்மதியாய் இருக்கலாம்தான். ஊரில் எந்தப் பரபரப்பும் இருக்காது. எந்த டென்ஷனும் கிடையாது. மனசில்லையே…! இங்கயே இருப்போம்….நம்ம பையன் நாம கூட இருக்கிறதைத்தான் விரும்பறான். தனிக் குடித்தனம்ங்கிற எண்ணமெல்லாம் அவன் மனசுல இல்ல…தங்கமான பையனாக்கும். புரிஞ்சிக்குங்க…பேசாம அடங்கிக் கிடங்க….!

                                                அடங்கித்தான் கிடக்கிறேன் நான். இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு  மொழி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் சொல்வது பேச்சு மொழி….புரிகிறதா?  மௌன மொழியில்தான் இப்போது என் பயணம்!! என்னைப் போல் உங்களில் பலரும் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறதுதான்.  கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுதானே நிஜம்…!

                                                                                    -------------------------------------

                                               

 

           

 

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...